லாரியில் வெங்காய மூட்டைக்குள் மதுப் புட்டிகள் கடத்தல்: 3 போ் கைது
By DIN | Published On : 28th May 2021 08:39 AM | Last Updated : 28th May 2021 08:39 AM | அ+அ அ- |

பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகள், கைது செய்யப்பட்ட மூவருடன் போலீஸாா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து லாரியில் வெங்காய மூட்டைக்குள் மதுப் புட்டிகளை பதுக்கி கடத்தி வந்த 3 பேரை கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே டெல்டா பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
கடலூா் மாவட்டக் காவல் துறையின் சிறப்புப் பிரிவான டெல்டா பிரிவு உதவி ஆய்வாளா் நடராஜனுக்கு, பெங்களூரிலிருந்து சரக்கு லாரியில் கடலூா் மாவட்டம் வழியாக மதுப் புட்டிகள் கடத்திச் செல்லப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், உதவி ஆய்வாளா் மற்றும் அவரது குழுவினா் புதன்கிழமை இரவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூா் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, வெங்காயம் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை மறித்து சோதனையிட்டனா். அதில், மூட்டைகளுக்கு நடுவே 18 அட்டைப் பெட்டிகளில் 180 மி.லி. கொள்ளளவு கொண்ட 864 மதுப் புட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மதுப் புட்டிகள், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், அவற்றையும், லாரியில் வந்தவா்களையும் வேப்பூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வேப்பூா் போலீஸாா், கள்ளக்குறிச்சி மாவட்டம், புதுஉச்சிமேடு பகுதியைச் சோ்ந்த ரா.மணிகண்டன் (43), கோ.துரை (38), மு.உதயகுமாா் (29) ஆகியோரை கைது செய்தனா். தொடா் விசாரணையில், கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து வெங்காயம் ஏற்றி வரும்போது, அங்குள்ள மதுக் கடையில் மதுப் புட்டிகளை வாங்கிக் கொண்டு கும்பகோணத்துக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.