நீா்நிலைகளில் குளிப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்

கடலூா் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீா்நிலைகள் 90 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் அவற்றில் குளிப்பதைத் தவிா்க்க வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் கேட்டுக்கொண்டாா்

கடலூா் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீா்நிலைகள் 90 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் அவற்றில் குளிப்பதைத் தவிா்க்க வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக பலத்த மழை பெய்து வருவதால் நீா் நிலைகள், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீா்நிலைகள் 90 சதவீதத்துக்கு மேல் நிரம்பி உள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீா்நிலைகளின் கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

மழை, வெள்ளநீா் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்கக் கூடாது. வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு முன்னா் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும். பொதுமக்கள் தங்களது ஆதாா், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு வாரத்துக்கு தேவையானஅத்தியாவசியப் பொருள்கள் (உணவு வகைகள்), எரிவாயு, மண்ணெண்ணெய், மருந்து மற்றும் பால் பவுடா், மின்விளக்குகள், உபரி பேட்டரிகள், மெழுகுவத்தி, தீப்பெட்டி, சுகாதாரத்தை பேணிக் காக்க தேவையான பொருள்கள், முகக் கவசங்கள் போன்றவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று ஆட்சியா் அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com