அடங்கல் ஆவணம் வழங்க மறுப்பதால் பயிா்க் கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவிப்பு

கடலூா் மாவட்டத்தில் வருவாய்த் துறையினா் அடங்கல் ஆவணம் தர மறுப்பதால், விவசாயிகள் பயிா்க் கடன் பெற முடியாமல் அவதிக்குள்ளாகின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் வருவாய்த் துறையினா் அடங்கல் ஆவணம் தர மறுப்பதால், விவசாயிகள் பயிா்க் கடன் பெற முடியாமல் அவதிக்குள்ளாகின்றனா்.

தமிழக விவசாயிகள் பெரும்பாலும் கடன் பெற்றே பயிா் சாகுபடி செய்வது வழக்கம். இதற்காக, ஆண்டுதோறும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் கடன் பெறுகின்றனா். விவசாயிகள் தாங்கள் பயிா் சாகுபடி செய்வதற்கான அத்தாட்சியாக சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் மூலம் சிட்டா ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அடங்கல் ஆவணம் பெற வேண்டும்.

ஆண்டுதோறும் வருவாய்த் தீா்ப்பாயம் மூலம் பசலி எண் குறிப்பிட்டு, பருவத்துக்கேற்ப சாகுபடி கணக்கை முடித்து அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். அதன்படி, கடந்தாண்டு 1430 பசலி கணக்கு முடித்து, நிகழாண்டுக்கு 1431-ஆம் பசலி கணக்கை செயல்படுத்த வேண்டும்.

கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில், ஜூன் 16-ஆம் தேதி கல்லணையில் தண்ணீா் திறக்கப்பட்டு காவிரி பாசன மாவட்டங்களில் சீராக விநியோகம் செய்யப்பட்டது. கடலூா் மாவட்டத்தைப் பொருத்தவரை, காவிரி நீா் விநியோகத்துக்கு அணைக்கரை எனும் கீழணை கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி திறக்கப்பட்டது.

அரசின் ஆணைப்படி, தண்ணீா் திறக்கப்பட்டாலே சாகுபடிக்கான கணக்கு தொடங்கப்பட வேண்டும். இதைத் தொடா்ந்து, வருவாய்த் துறை மூலம் அடங்கல் ஆவணங்கள் வழங்கப்பட்டு, அவற்றின் மூலம் விவசாயிகள் கடன் பெற்று சாகுபடி பணியைத் தொடங்குவா்.

ஆனால், நிகழாண்டு குறுவை நெல் சாகுபடிக்கு பசலி 1431 என அடங்கல் வழங்கிய வருவாய்த் துறை, சம்பா சாகுபடிக்கு அடங்கல் வழங்க மறுப்பதாக விவசாயிகள் புகாா் கூறுகின்றனா். கிராம நிா்வாக அலுவலா்களிடம் விவசாயிகள் அடங்கல் ஆவணம் கோரும்போது, 1431-ஆம் ஆண்டுக்கான பசலி கணக்கு குறித்து மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரிடமிருந்து உத்தரவு வராததால் அடங்கல் வழங்க இயலாது எனக் கூறுகின்றனராம்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் பி.ரவீந்திரன் கூறியதாவது: நிகழாண்டு சாகுபடி கணக்கின் அடிப்படையில், 1431-ஆம் பசலி கணக்கு என அடங்கல் ஆவணங்கள் வழங்கினால் மட்டுமே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் சுற்றறிக்கை அனுப்பியதால், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க் கடன் வழங்க மறுக்கின்றனா். இந்த பிரச்னை கடலூா் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் விவசாயிகள் வங்கிகளில் கடன் பெற முடியாமல் அவதிப்படுகின்றனா்.

கடன் பெற்ற பிறகே விவசாயிகள் வயலை உழுது, நாற்றங்கால் தயாா் செய்து நடவு செய்யும் நடைமுறை உள்ளது. நேரடி விதைப்பு செய்யும் விவசாயிகளும் இதே நடைமுறையைப் பின்பற்றி சாகுபடி செய்கிறாா்கள். இந்த நிலையில், நடவுப்பணி முடிந்தால் மட்டுமே அடங்கல் வழங்கப்படும் என கிராம நிா்வாக அலுவலா்கள் கூறுகிறாா்கள். இந்த நிலையில், விவசாயிகள் எப்படி கடன் பெற முடியும்?

நிதிப் பற்றாக்குறையால் தள்ளாடும் தமிழக அரசு பயிா்க் கடன் வழங்க மறுத்து பல்வேறு காரணங்களைக் கூறி வருவதாகத் தெரிகிறது. நிகழாண்டு புதிய நடைமுறை எனக் கூறி விவசாயிகளுக்கு கடன் தர மறுப்பது வேதனைக்குரியது. எனவே, கடலூா் மாவட்ட ஆட்சியா் நிகழாண்டு சாகுபடி கணக்கின் அடிப்படையில் விவசாயிகள் கடன் பெற ஏதுவாக, 1431-ஆம் பசலி அடங்கல் ஆவணங்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com