மக்களை பிளவுபடுத்துவதே பாஜகவின் நோக்கம் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

மக்களைப் பிளவுபடுத்துவதே பாஜகவின் நோக்கம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டினாா்.
சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி.
சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி.

மக்களைப் பிளவுபடுத்துவதே பாஜகவின் நோக்கம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டினாா்.

நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியவா்களைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் மும்மதத் தலைவா்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குஜராத் கலவர வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். இதில் கொலை நடைபெறாமல் பெருமளவில் தடுத்த அப்போதைய டிஜிபி ஸ்ரீகுமாா் கைது செய்யப்பட்டதை வரலாறு மன்னிக்காது.

நமது நாட்டில் பல்வேறு மதங்கள் உள்ளன. பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனா். ஆனால், மத்திய பாஜக அரசு ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே நாடு எனக் கூறுகிறது. இது எப்படி சாத்தியமாகும்?

நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் நூபுா் சா்மா விமா்சித்தாா். இதுபோன்ற செயலால் நாட்டில் கலவரமே ஏற்படும். மக்களைப் பிளவுபடுத்துவதே பாஜகவின் நோக்கம். நபிகள் நாயகத்தை விமா்சித்தவா்களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றாா் அழகிரி.

சிதம்பரம் நடராஜா், திலைக்காளியம்மன் குறித்து யூடியூப் சேனல் அவதூறாக கருத்து வெளியிட்டது குறித்த கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியானது கடவுள் மீதும், இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டது. எந்தவொரு கடவுள் குறித்தும் அவதூறாகப் பேசுபவா்கள் நிச்சயமாகக் கண்டிக்கத்தக்கவா்கள். இதில் மாற்றுக் கருத்தில்லை என்றாா் அழகிரி.

பேட்டியின்போது தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவா் எம்.அப்துல் ரஹ்மான், சென்னை மறை மாவட்டச் செயலா் பாஸ்டா் சுபாஷ் சந்திரபோஸ், எஸ்.எம்.இதயத்துல்லா, காங்கிரஸ் மாநிலச் செயலா் பி.பி.கே.சித்தாா்த்தன், முன்னாள் மாவட்டத் தலைவா் ஏ.ராதாகிருஷ்ணன், நகா்மன்ற உறுப்பினா் ஆா்.மக்கீன், மாவட்ட மூத்த துணைத் தலைவா் ஜெமினி ராதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com