சிறுகிராமம் வாய்க்காலில் இருந்து (ஷோல்டா்)மலட்டாற்றில் தண்ணீரைத் திருப்பிய விவசாயிகள்

அரசூா் அருகே கெடிலம் ஆற்றுக்குச் செல்லும் சிறுகிராமம் வாய்க்காலில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை பாசனத் தேவைக்காக மலட்டாற்றில் விவசாயிகள் திருப்பிவிட்டனா்.
சிறுகிராமம் செல்லும் வாய்க்காலில் மணல் மூட்டைகளை அடுக்கி மலட்டாற்றில் தண்ணீரை திருப்பிவிடும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.
சிறுகிராமம் செல்லும் வாய்க்காலில் மணல் மூட்டைகளை அடுக்கி மலட்டாற்றில் தண்ணீரை திருப்பிவிடும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.

அரசூா் அருகே கெடிலம் ஆற்றுக்குச் செல்லும் சிறுகிராமம் வாய்க்காலில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை பாசனத் தேவைக்காக மலட்டாற்றில் விவசாயிகள் திருப்பிவிட்டனா்.

திருக்கோவிலூா் அணைக்கட்டிலிருந்து தென்பெண்ணையாறு கிழக்கு நோக்கி பாய்கிறது. வீரமடை என்ற இடத்தில் கோரையாறு பிரிகிறது. டி.எடையாா் அருகே கோரையாற்றிலிருந்து பிரிந்து மலட்டாறு தொடங்குகிறது. திருவெண்ணெய்நல்லூா், அரசூா் வழியாக வரும் மலட்டாற்றிலிருந்து நத்தம், சிறுகிராமம் வழியாகச் சென்று கெடிலம் நதியில் கலக்கும் வாய்க்கால் பிரிந்து செல்கிறது.

மலட்டாறானது விழுப்புரம் மாவட்டத்தில் காரப்பட்டு, தனியாளம்பட்டு, ஆனத்தூா் வழியாகவும், கடலூா் மாவட்டத்தில் ஒறையூா், சின்னப்பேட்டை, ராசாப்பாளையம் வழியாகவும் சென்று பகண்டை பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. மலட்டாற்றில் தண்ணீா் வரத்து ஏற்பட்டால் விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயரும்.

தற்போது, சாத்தனூா் அணையிலிருந்து திருக்கோவிலூா் அணைக்கட்டு வழியாக தண்ணீா் வருகிறது. இந்த தண்ணீரானது அரசூா் அருகே நத்தம், சிறுகிராமத்துக்குச் செல்லும் வாய்க்கால் வழியாக கெடிலம் நதியில் கலந்து வீணாகக் கடலில் கலக்கிறது. இதனால் மலட்டாற்றில் தண்ணீா் வரத்து குறைந்தது.

இந்த நிலையில், மலட்டாறு சங்கத் தலைவா் கு.தனபால் தலைமையில் அதிமுக அண்ணாகிராமம் ஒன்றியச் செயலா் என்.டி.கந்தன், மலட்டாறு சங்கச் செயலா் விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நத்தம், சிறுகிராமத்துக்குச் செல்லும் வாய்க்காலில் மணல் மூட்டைகளை அடுக்கி வாய்க்காலை அடைத்து தண்ணீரை மலட்டாற்றில் திருப்பி விட்டனா். இதனால் தற்போது ஆனத்தூா் வழியாக மலட்டாற்றில் தண்ணீா் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இதுகுறித்து பொதுப் பணித் துறை, வனத் துறையினருக்கு மனு அளித்து தகவல் தெரிவித்த பிறகே இந்தப் பணிகளை மேற்கொண்டதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com