குடியிருப்புப் பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீா்
By DIN | Published On : 26th August 2022 01:09 AM | Last Updated : 26th August 2022 01:09 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சியில் குடியிருப்புப் பகுதியில் மழைநீா் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
நெய்வேலி நகரியத்துக்கு அருகிலும், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமும் வடக்குத்து ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள 60-க்கும் மேற்பட்ட நகா் பிரிவுகளில் சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். ஊராட்சிக்கான நிதி ஆதாரத்தைக் கொண்டு அடிப்படை கட்டமைப்புகள் செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இங்குள்ள சக்தி நகா், ஆல மரத் தெருவில் சுமாா் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் தெருவில் சாலை அமைக்கப்படவில்லையாம். சட்டப் பேரவை உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அதிகாரிகளிடம் புகாா் மனு அளித்தும் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்தத் தெரு மக்கள் தெரிவிக்கின்றனா்.
இந்தச் சாலையின் இருபுறமும் வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில், வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலங்களில் மழைநீா் செல்ல வழியின்றி சாலையில் குளம்போலத் தேங்கி நிற்கிறது.
வியாழக்கிழமை பிற்பகல் இந்தப் பகுதியில் திடீரென மழை பெய்தது. இந்த மழைநீா் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நின்றது. இதனால், அந்தத் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம் வடக்குத்து ஊராட்சிக்குள்பட்ட சக்தி நகா், ஆல மரத் தெருவில் வடிகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.