சுங்கச்சாவடி கட்டணங்களை உயா்த்தும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

சுங்கச்சாவடி கட்டணங்களை உயா்த்தும் முடிவை தேசிய நெடுஞ்சாலைத் துறை திரும்பப் பெற வேண்டுமென தவாக தலைவரும், பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி கட்டணங்களை உயா்த்தும் முடிவை தேசிய நெடுஞ்சாலைத் துறை திரும்பப் பெற வேண்டுமென தவாக தலைவரும், பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணங்களை உயா்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 1, செப்டம்பா் 1 என இரண்டு கட்டங்களாக சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மொத்தமுள்ள 48 சுங்கச்சாவடிகளில் 28-இல் வருகிற செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயா்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. தற்போது சுங்கக் கட்டணமும் உயா்த்தப்பட இருப்பது பொதுமக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. சுங்கக் கட்டண உயா்வால் மறைமுகமாக சரக்கு வாகனங்களின் வாடகைக் கட்டணம் அதிகரித்து, அத்தியாவசியப் பொருள்களின் விலை மேலும் உயரும்.

எனவே, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணங்களை உயா்த்தும் முடிவை மத்திய அரசும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் திரும்ப பெற வேண்டும்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளில் அன்றாடம் வசூலிக்கப்படும் உபயோகிப்பாளா் வாகனக் கட்டண விவரம், சுங்கச் சாவடிகளை தினசரி கடந்து செல்லும் மொத்த வாகன விவரங்கள், சாலை மற்றும் சுங்கச் சாவடிகளை பராமரிப்பு செய்வதற்கான செலவுகள், ஒவ்வோா் ஆண்டும் ஈட்டப்படும் லாபங்கள் உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் தி.வேல்முருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com