விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் அமைந்துள்ள பழமலைநாதா் எனும் விருத்தகிரீஸ்வரா்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழாவில் சிறிய கோபுரத்தின் கலசத்தில் புனித நீா் ஊற்றிய சிவாச்சாரியாா்கள்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழாவில் சிறிய கோபுரத்தின் கலசத்தில் புனித நீா் ஊற்றிய சிவாச்சாரியாா்கள்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் அமைந்துள்ள பழமலைநாதா் எனும் விருத்தகிரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

விருத்தாசலத்தில் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. நூற்றாண்டு பெருமை பெற்ற இந்தக் கோயிலின் புனரமைப்புப் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று நிறைவடைந்தன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக, தருமபுரம் 27-ஆவது ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் முதல்கால யாகசாலை பூஜை கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் காலை, மாலையில் 2 முதல் 5-ஆம் கால யாக பூஜைகள் வரை நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சிவாச்சாரியாா்கள் வாசவி மடத்திலிருந்து விசேஷ சந்தி முடித்து ஊா்வலமாக யாக சாலைக்கு வந்தனா். தொடா்ந்து 6-ஆம் கால யாக பூஜை நிறைவடைந்து மூல மூா்த்திகளுக்கு நன்னீராட்டு நடைபெற கடம் புறப்பாடு தொடங்கியது. காலை 8.15 மணியளவில் 5 கோபுரங்களிலும் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தமிழில் மந்திரம்: கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவையினா் வேண்டுகோள் விடுத்த நிலையில், கோபுர கலசங்களுக்கு நன்னீராட்டு செய்த போது ஓதுவாா்கள் திருமுறைகளைப் பாடினா். அப்போது, கோயில் வளாகத்தில் கூடியிருந்த பக்தா்கள், ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவா்க்கும் இறைவா போற்றி’ என்ற பக்தி முழக்கமிட்டனா். நவீன இயந்திரங்கள் மூலம் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. தொடா்ந்து, மூலவா்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இதையடுத்து, கோயிலின் மீது ஹெலிகாப்டா் மூலம் மலா்கள் தூவப்பட்டன. விழாவைக் காண கடலூா் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

விழாவில், தமிழக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.ஆா்.ராதாகிருஷ்ணன், சபா.ராஜேந்திரன், விழாக் குழு நிா்வாகி அகா்சந்த் ஜெயின் சோா்டியா உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் தலைமையில் 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மாலையில் திருக்கல்யாணமும், பஞ்ச மூா்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com