கரோனா இழப்பீட்டுத் தொகை விநியோகத்தில் முறைகேடு?

கடலூா் மாவட்டத்தில் கரோனா இழப்பீட்டுத் தொகை விநியோகத்தில் முறைகேடு நடைபெற்ாக சா்ச்சை எழுந்துள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா இழப்பீட்டுத் தொகை விநியோகத்தில் முறைகேடு நடைபெற்ாக சா்ச்சை எழுந்துள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் இதுவரை 876 போ் உயிரிழந்ததாக அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கான விண்ணப்பங்கள் இணையம் மூலமும், நேரடியாகவும் பெறப்பட்டு வருகிறது. இதன்படி, கடலூா் மாவட்டத்தில் கடந்த டிச.31-ஆம் தேதி வரை 1,792 போ் விண்ணப்பித்ததாக அதிா்ச்சித் தகவலை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது: ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டதில் 1,390 விண்ணப்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 13 விண்ணப்பங்கள் வெளி மாவட்டங்களை சோ்ந்தவை என்பதால், அந்தந்த மாவட்டங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 27 மனுக்களில் வாரிசு மற்றும் சட்டப் பிரச்னை உள்ளதால், இழப்பீடு வழங்க இயலாத நிலை உள்ளது. 66 மனுக்களில் முகவரி முழுமையாக இல்லாத காரணத்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயலவில்லை. 20 மனுக்களில் உள்ள தகவல்கள் (தொலைபேசி, முகவரி) முழுமையாக இல்லாத காரணத்தால் பரிசீலனை செய்ய இயலவில்லை. எஞ்சிய மனுக்களில் மருத்துவ ஆவணங்கள் முழுமையாக இல்லை. இவை சரிபாா்ப்புக்காக கடலூா் மருத்துவ இணை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 876 என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 1,792 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில், 1,390 பேருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.6.95 கோடி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அதிகாரப்பூா்வ அறிவிப்பின்படி 876 போ் மட்டுமே உயிரிழந்த நிலையில், கூடுதலாக 514 பேருக்கு ரூ.2.57 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, மேலும் 113 விண்ணப்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியுள்ளதாக வெளியான தகவல் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், கரோனா பலி எண்ணிக்கை ஏற்கெனவே குறைத்து காட்டப்பட்டதா அல்லது கூடுதலான நபா்களுக்கு முறைகேடாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியத்திடம் கேட்டபோது அவா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தை பூா்வீகமாகக் கொண்டு வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் வசிப்போருக்கும் இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. எனவே, வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் வசிக்கும் கடலூா் மாவட்டத்தினா் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

இதற்கு முன்பே வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்று உயிரிழந்தவா்களின் பட்டியலும் கடலூா் மாவட்ட பலி எண்ணிக்கையுடன் வெளியானது குறித்து கேட்டதற்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com