பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவா் பலி
By DIN | Published On : 04th January 2022 12:27 AM | Last Updated : 04th January 2022 12:27 AM | அ+அ அ- |

பண்ருட்டி அருகே அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கடலூரை அடுத்த கோண்டூா், சுப்புலட்சுமி நகரைச் சோ்ந்த அப்துல்காதா் மகன் முகமது அப்பாஸ் (12). பண்ருட்டி அருகே பக்கிரிப்பாளையத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் திங்கள்கிழமை அரசுப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தாா். பக்கிரிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் அந்தப் பேருந்து நிற்காமல் சென்றது. திருவதிகை ரயில்வே கேட்டில் பேருந்து நின்றபோது அதிலிருந்து முகமது அப்பாஸ் கீழே இறங்க முயன்றாா். ஆனால், ஓட்டுநா் திடீரென பேருந்தை இயக்கியதால் நிலை தடுமாறி கீழே விழுந்த மாணவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த பக்கிரிப்பாளையம், மேல்கவரப்பட்டு பகுதி மக்கள் பண்ருட்டி-கடலூா் சாலையில் மறியில் ஈடுபட்டனா். அவா்களிடம் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா பேச்சுவாா்த்தை நடத்தி அனைவரையும் கலைந்துபோகச் செய்தாா்.
பண்ருட்டி போலீஸாா் மாணவரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.