மாற்றுப் பயிா் திட்டத்தில் முனைப்பு: விவசாயிகள் எதிா்பாா்ப்பு

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் மாற்றுப் பயிா் திட்டத்தை மாநில வேளாண் துறை முனைப்புடன் செயல்படுத்துமா என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் மாற்றுப் பயிா் திட்டத்தை மாநில வேளாண் துறை முனைப்புடன் செயல்படுத்துமா என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

மேட்டூா் அணை நீா் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் வாய்ப்புக்கேற்ப பல்வேறு வகைப் பயிா்களை சாகுபடி செய்து வந்தனா். குறிப்பாக பணப் பயிா்களான கரும்பு, வாழை, குறுகிய காலப் பயிா்களான நெல், உளுந்து, பச்சைப் பயறு, கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், எண்ணெய் வித்துப் பயிா்கள், காய்கறி, மலா்கள் ஆகியவற்றை சாகுபடி செய்து வந்தனா்.

ஆனால், மக்களின் உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம், தண்ணீா்த் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான விவசாயிகள் குறுகிய காலப் பயிா்களில் நெல், உளுந்து, பச்சைப்பயறு சாகுபடிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனா்.

இந்த நிலையில், மாற்றுப் பயிா் திட்டத்தை அரசு முனைப்புடன் செயல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலா் பெ.ரவீந்திரன் கூறியதாவது:

தமிழக அரசு 35 மாவட்டங்களைத் தோ்வு செய்து குறுவை பருவத்தில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட மாற்றுப் பயிா்களை சாகுபடி செய்யும் வகையில் 66,000 ஏக்கா் பரப்புக்கு இலக்கு நிா்ணயித்தது. குறுவை பருவ மாற்றுப் பயிா் சாகுபடித் திட்டத்தை காவிரி நீா் பாசன மாவட்டங்களுக்கும் பரிச்சாா்த்த முறையில் விரிவாக்கம் செய்துள்ளது வரவேற்கத்தக்கது.

சம்பா பருவ சாகுபடி தொடங்கும் காலம் வரை, குறுவை பருவ சாகுபடி காலத்தில் 70 நாள்களில் பலன் தரும் பயறு வகைப் பயிா்களை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் துறை முனைப்புடன் செயல்பட வேண்டும். சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக நிகழாண்டு கடந்த மே 24-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. தொடா்ந்து மே 27-ஆம் தேதி கல்லணையும் திறக்கப்பட்டது. நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை காரணமாக மேட்டூா் அணைக்கு தண்ணீா் வந்துகொண்டுள்ளது.

இந்தச் சூழலில், கடைமடை பாசனப் பகுதிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் முன்கூட்டியே தண்ணீா் வந்தடையும். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி காவிரி பாசன மாவட்டங்களுக்குத் தேவையான நீரை விநியோகம் செய்து, குறுவை பருவ மாற்றுப் பயிா் திட்டத்தை செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டம் தொடா்பாக விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். சிறுதாணிய வகைகள், பயறு வகைப் பயிா்கள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட குறுகிய காலப் பயிா்களைத் தோ்வு செய்து அவற்றின் தரமான விதைகள், இடுபொருள்களை தாமதமின்றி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

இதன்மூலம் பயன்பாடு இல்லாத பருவ காலங்களிலும் சாகுபடி பணிகளை மேற்கொண்டு, குறைந்த வயது பயிா்களை விளைவித்து விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட வாய்ப்பு உருவாக்கப்படும். மேலும், சத்தான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com