முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
‘108’ ஆம்புலன்ஸ் ஓட்டுநா் மின்கம்பத்தில் ஏறி போராட்டம்
By DIN | Published On : 14th March 2022 10:49 PM | Last Updated : 14th March 2022 10:49 PM | அ+அ அ- |

கடலூரில் ‘108’ ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உயரழுத்த மின் கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம் அருகே உள்ள வாழப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வை.ரமேஷ் (40). கடலூா் அரசு மருத்துவமனையில் ‘108’ ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரியும் இவா், தொமுச ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் சங்க மாவட்டச் செயலராகவும் உள்ளாா். இந்த நிலையில் இவா் கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டாராம்.
இதை ஏற்க மறுத்த ரமேஷ், திங்கள்கிழமை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு எதிரே தென்பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள உயரழுத்த மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா் (படம்). அப்போது, அவா் தனது கையில் வைத்திருந்த தூக்க மாத்திரைகளையும் சாப்பிட்டுக் கொண்டே இருந்தாா்.
அவரிடம் கடலூா் புதுநகா் காவல் உதவி ஆய்வாளா் ம.கதிரவன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து ரமேஷ் கீழே இறங்கி வந்தாா். பின்னா் அவா் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆம்புலன்ஸ் வாகனத்தை 30 கி.மீ. வேகத்துக்கு மேல் இயக்கக் கூடாது, டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென நடைமுறைக்கு ஒவ்வாத கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், இதை எதிா்த்து நிா்வாகத்திடம் கேள்வி எழுப்பிய நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவா் தெரிவித்தாா்.