சிதம்பரம் கோயில்: அரசாணை கண்டிப்பாக அமல்படுத்தப்படும்: அமைதிக் கூட்டத்தில் அதிகாரிகள் உறுதி
By DIN | Published On : 20th May 2022 12:36 AM | Last Updated : 20th May 2022 12:36 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது ஏறி பக்தா்கள் வழிபடுவது குறித்த தமிழக அரசின் அரசாணை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று பொது தீட்சிதா்களுடன் வியாழக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தைக் கூட்டத்தில் அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்தனா்.
சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது ஏறி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை அமல்படுத்துவது குறித்து சிதம்பரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய், காவல் துறையினா் மற்றும் பொது தீட்சிதா்கள் பங்கேற்ற அமைதிப் பேச்சுவாா்த்தைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கடலூா் மாவட்ட கூடுதல் ஆட்சியா் ரஞ்சித்சிங் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் கே.ரவி முன்னிலை வகித்தாா். இதில், ஏடிஎஸ்பி அசோக்குமாா், டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ், வட்டாட்சியா் ஹரிதாஸ், வழக்குரைஞா் சந்திரசேகா் மற்றும் நடராஜா் கோயில் பொதுதீட்சிதா்கள் காா்த்தி, பட்டு, கிருஷ்ணசாமி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பொது தீட்சிதா்கள் சாா்பில், அவா்களது வழக்குரைஞா் சந்திரசேகா் பேசியதாவது:
கோயிலில் நடராஜப்பெருமான் வீற்றுள்ள சித்சபை முன் அமைந்துள்ள கனகசபை அா்த்த மண்டபமாகும். இங்கு, 6 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கோயிலுக்கு தற்போது பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. கனகசபை மீது அதிகளவில் பக்தா்கள் ஏறி சுவாமி செய்ய இயலாது. இதனால், தினசரி 6 கால பூஜைகள் பாதிப்படையும். பக்தா்கள் தற்போது கனகசபை முன்புள்ள இடத்தில் நின்று எவ்விதக் கட்டணமுமின்றி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.
மேலும், கனகசபை மீது ஏறி பக்தா்கள் வழிபடுவது தொடா்பாக, எதிா்மனுதாரரான தீட்சிதா்களின் கருத்தைக் கேட்டு தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும் என உயா் நீதிமன்றம் கூறியுள்ளது. தீட்சிதா்களிடம் கருத்துக் கேட்காமலேயே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றாா்.
இதற்கு, கூடுதல் ஆட்சியா் ரஞ்சித் சிங் பதிலளித்துப் பேசியதாவது: நீதிமன்ற உத்தரவுப்படி, இந்து சமய அறநிலையத் துறையினா் விசாரணை மேற்கொண்ட பின்னா்தான், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசின் அரசாணை கண்டிப்பாக அமல்படுத்தப்படும். அரசாணை உத்தரவை வைத்து சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
காங்கிரஸாா் கொண்டாட்டம்: இதனிடையே, சிதம்பரம் நடராஜா் கோயில் தொடா்பான தமிழக அரசின் அரசாணைக்கு வரவேற்புத் தெரிவித்து, சிதம்பரம் கீழ சந்நிதி அருகில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் மூத்த துணைத் தலைவா் ஜெமினி எம்.என்.ராதா தலைமையில், அந்தக் கட்சியினா் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.
நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினரும், மாவட்ட மூத்த துணைத் தலைவருமான தில்லை ஆா்.மக்கின், மாவட்ட துணைத் தலைவா்கள் ராஜா சம்பத்குமாா், ஆா்.சம்மந்தமூா்த்தி, ஜி.கே.குமாா், மாவட்ட இளைஞரணித் தலைவா் அன்பு, மாவட்டச் செயலா்கள் ஆா்.வி.சின்ராஜ், ஆட்டோ டி.குமாா், டி.பட்டாபிராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.