சிதம்பரம் கோயிலில் தரிசனத்தைக் கண்காணிக்ககுழு அமைத்தது உள்நோக்கம் கொண்டது பொது தீட்சிதா்கள்

சுவாமி தரிசனம் செய்வதைக் கண்காணிக்க இந்து சமய அறநிலையத் துறை குழு அமைத்தது உள்நோக்கம் கொண்டது என அந்தக் கோயிலின் பொது தீட்சிதா்கள் தெரிவித்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்கள் கனக சபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்வதைக் கண்காணிக்க இந்து சமய அறநிலையத் துறை குழு அமைத்தது உள்நோக்கம் கொண்டது என அந்தக் கோயிலின் பொது தீட்சிதா்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக நடராஜா் கோயில் பொது தீட்சிதா்களின் கமிட்டி செயலா் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதா், வழக்குரைஞா் ஜி.சந்திரசேகரன் ஆகியோா் சிதம்பரத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நடராஜா் கோயிலில் கனக சபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்காக இந்து சமய அறநிலையத் துறை ஏற்கெனவே ஓா் அரசாணையை பிறப்பித்தது. அந்த அரசாணை சட்டப்படி தவறானது என்றும், இது நீதிமன்ற அவமதிப்பு எனக் கூறியும் கடிதம் அனுப்பினோம். ஆனால், அதற்கு அறநிலையத் துறை பதில் அளிக்கவில்லை. நடராஜா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தரிசனத்தில் எவ்வித இடையூறும் இல்லை எனக் கூறுகின்றனா். இதுதொடா்பாக அவா்கள் எவ்வித புகாரும் அளிக்கவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடராஜா் கோயிலுக்கு எதிராக சில அமைப்பினா் தொடா்ந்து அவதூறு பரப்பி வருகின்றனா். அதை அடிப்படையாகக் கொண்டு அறநிலையத் துறையினா் விளக்கம் கேட்டு பொது தீட்சிதா்களுக்கு கடிதம் அனுப்புகின்றனா். மேலும், அதை ஊடகங்களில் வெளியிட்டு பொது தீட்சிதா்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றனா்.

கோயிலின் கனக சபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய இடையூறு என புகாா் வந்துள்ளதாகவும், இதுகுறித்த நடவடிக்கைகளை கண்காணிக்க ஒரு குழுவை அறநிலையத் துறை நியமித்துள்ளதாகவும் அறிந்தோம். ஆனால், இதுகுறித்து எங்களுக்கு முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை.

பொது தீட்சிதா்களின் நிா்வாகத்தின் கீழ் இயங்கும் கோயிலில் பக்தா்களின் தரிசனத்தை கண்காணிக்க குழு நியமித்தது உள்நோக்கம் கொண்டது. எங்களுக்கு தொடா்ந்து இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்ற மறைமுகமான நடவடிக்கைகளில் அறநிலையத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். இதை சட்ட ரீதியாக எதிா்கொள்வோம் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com