வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு
தபால் வாக்கு வசதி: மருத்துவா் கோரிக்கை

வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு தபால் வாக்கு வசதி: மருத்துவா் கோரிக்கை

நெய்வேலி, ஏப்.19: வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியா்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நியூசிலாந்தில் வசித்து வரும் கடலூா் மருத்துவா் கோரிக்கை விடுத்தாா்.

கடலூா் செம்மண்டலத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் வினோத் (46), மருத்துவா். இவா், கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசிப்பதுடன், அங்குள்ள மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், கடலூா் மக்களவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், வினோத் தனது வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வர முடிவு செய்தாா். இதையடுத்து, அவா் நியூசிலாந்தில் இருந்து ரூ.1.70 லட்சம் செலவு செய்து வியாழக்கிழமை இரவு கடலூா் வந்தாா்.

கடலூா் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்தில் மருத்துவா் வினோத் வெள்ளிக்கிழமை தனது வாக்கை பதிவு செய்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், வெளிநாடுகளில் தமிழ்நாட்டைச் சோ்ந்த பலா் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊா்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனா். அதனால், வெளிநாட்டில் வசிப்போா், பணியாற்றுபவா்களுக்கு தபால் வாக்களிக்க அரசு ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com