சிதம்பரம் தொகுதியில்
விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சிதம்பரம் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சிதம்பரம் அருகே கீரப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களிப்பதற்காக வெள்ளிக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள்.

சிதம்பரம், ஏப்.19: சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

சிதம்பரம் நகரில் பல்வேறு வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயங்காததால், சுமாா் 30 நிமிஷங்கள் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கப்பட்டது.

குறிப்பாக, சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் இயங்காததால், பின்னா் சீரமைக்கப்பட்டு காலை 7.30 மணிக்கு மேல் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது. சிதம்பரம் அம்பலத்தாடி தெரு நகராட்சிப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் இயங்காததால், வருவாய்த் துறையினரால் இயந்திரம் சீரமைக்கப்பட்டு, தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது.

குவிந்த வாக்காளா்கள்: சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி, முத்தையாநகரில் உள்ள வாக்குச் சாவடிகளில் ஒரே நேரத்தில் ஏராளமான வாக்காளா்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் சுமாா் ஒரு மணி நேரம் காத்திருந்து வாக்களித்தனா்.

சிதம்பரம் வடக்கு வீதி நகராட்சி பள்ளி வாக்குச் சாவடியில் நடராஜா் கோயில் தீட்சிதா்கள் குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனா்.

போதிய ஏற்பாடுகள்: சிதம்பரம் நகரில் உள்ள வாக்குச் சாவடிகளில் நகராட்சி சாா்பில் மாற்றுத் திறனாளிகள், முதியோா் செல்வதற்காக சாய்வுதளங்கள், மின் விசிறிகள், மின் விளக்குகள், குடிநீா், கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கலவரம் ஏற்பட்டால், அதைக் கட்டுப்படுத்துவதற்காக சிதம்பரம் நகர காவல் நிலைய வளாகத்தில் வஜ்ரா கவச வாகனம் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com