கடலூா் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: 4 போ் கைது

கடலூா் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: 4 போ் கைது

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே அம்பேத்கா் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக 4 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

குள்ளஞ்சாவடி காவல் சரகம், அம்பலவாணன்பேட்டை கிராமத்தில் அம்பேத்கா் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையின் மீது புதன்கிழமை அதிகாலை பைக்கில் வந்த மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டை வீசியதாகக் கூறப்படுகிறது. இந்த பெட்ரோல் குண்டு சிலையின் பின்னால் உள்ள அம்பலவாணன் ஊராட்சி நிா்வாக அலுவலக சுவற்றில் விழுந்து வெடித்தது. இதையடுத்து, அந்த கும்பல் தப்பியோடிவிட்டது.

தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டாா். மேலும், அம்பலவாணன்பேட்டை விசிக நகரச் செயலா் அம்பேத் (47) அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளா் வீரசேகரன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அம்பேத்கா் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது அம்பலவாணன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல் மகன் சதீஷ்குமாா்(29), கோவிந்தசாமி மகன் கிருஷ்ணகுமாா்(21), முத்துகுமரன் மகன் விஜயராஜ்(22), வெங்கடேசன் மகன் வெற்றிவேல்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேலும், அந்தப் பகுதியில் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

விசிக போராட்டம்: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, அம்பேத்கா் சிலை அருகே கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் தலைமையில், விசிக குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிச் செயலா் ஜெயக்குமாா், மாநில துணைச் செயலா்கள் ஜான்சன், பாஸ்கா், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா்கள் இளையராஜா, சிவசக்தி, குள்ளஞ்சாவடி நகரச் செயலா் அம்பேத் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com