ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை நடைபெற்ற கடலூா் ஆனைக்குப்பத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குநா் பூங்குழலி வீடு.
ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை நடைபெற்ற கடலூா் ஆனைக்குப்பத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குநா் பூங்குழலி வீடு.

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

சிதம்பரம், ஏப். 26: கடலூா் மாவட்டத்தில் பேரூராட்சி நிதி தணிக்கைக்கு வந்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வைத்திருந்த பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

சேத்தியாதோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 24-ஆம் தேதி ஊழல் தடுப்பு போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கணக்கில் வராத ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து ஊழல் தடுப்பு போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கடந்த ஒரு வாரமாக சேத்தியாதோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கை அதிகாரிகள் வருடாந்திர நிதி தணிக்கை மேற்கொண்டதில், அங்கு பல முறைகேடுகள் நடந்தது கண்டறியப்பட்டதாம். அவற்றை மறைக்கும் விதமாக சேத்தியாதோப்பு தோ்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலா் சீனிவாசன், தணிக்கை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வைத்திருந்த பணம்தான் அது என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சேத்தியாதோப்பு பேரூராட்சி செயல் அலுவலா் சீனிவாசன், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குநா் பூங்குழலி, உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளா் விஜயலட்சுமி ஆகியோா் மீது ஊழல் தடுப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், வடலூரில் உள்ள சேத்தியாத்தோப்பு தோ்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலா் சீனிவாசனின் வீடு, கடலூா் ஆனைக்குப்பத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குநா் பூங்குழலியின் வீடு, திருவந்திபுரத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளா் விஜயலட்சுமியின் வீடு ஆகியவற்றில் கடலூா் ஊழல் தடுப்பு ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீஸாா் மூன்று பிரிவுகளாக வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை மேற்கொண்டனா். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com