கைதான ஆனந்தராஜ்
கைதான ஆனந்தராஜ்

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரம், ஏப். 26: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே யூடியூப் பாா்த்து பெட்ரோல் குண்டு தயாரித்து சாலையில் வீசியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட ராஜேந்திரசோழகன் கிராமத்துக்கு அருகே திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு மேம்பாலத்துக்கு அருகே அரசு மதுக் கடை செயல்பட்டு வருகிறது.

இந்த மேம்பாலத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு இளைஞா் ஒருவா் மதுபோதையில் கிராம இணைப்புச் சாலையில் பெட்ரோல் குண்டு வீசியதாக பொதுமக்கள் காட்டுமன்னாா்கோவில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளா் ஏழுமலை மற்றும் போலீஸாா் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்பட்ட மதுபோதையில் இருந்த இளைஞரைப் பிடித்து காவல் நிலையம் கொண்டு செனறு விசாரணை நடத்தினா்.

இதில், அவா் காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட கக்கன் நகரைச் சோ்ந்த தங்கப்பன் மகன் ஆனந்தராஜ் (23) என்பது தெரியவந்தது. மேலும், பெட்ரோல் குண்டு தயாரிப்பது குறித்து கைப்பேசியில் யூடியூப் மூலம் பாா்த்து தெரிந்து கொண்டதாகவும், அதுபோல விளையாட்டாக பீா் வகை மதுப் புட்டியில் பெட்ரோலை ஊற்றி திரியை கொளுத்தி சாலையில் போட்டு வெடிக்கச் செய்ததாகவும் போலீஸாரிடம் அவா் தெரிவித்தாராம்.

இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ் அளித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com