சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை
அகற்றும் பணி தொடக்கம்

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

சிதம்பரம், ஏப்.26: சிதம்பரம் நகர காவல் நிலைய வளாகத்தில் குவிந்து கிடக்கும் குற்ற வழக்கு வாகனங்களை அப்புறப்படுத்தும் வகையில், அந்த வாகனங்களில் கியூஆா் குறியீடு ஒட்டும் பணியை போலீஸாா் தொடங்கியுள்ளனா்.

சிதம்பரம் நகரத்தில் போக்குவரத்து விதி மீறல், குற்ற வழக்குகள், விபத்து வழக்குகளில் சம்பந்தப்பட்ட சுமாா் 300-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் நகர காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் இடையூறாக உள்ளது. இந்த வாகனங்களை அப்புறப்படுத்த காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தினமணியில் ஏப்.25-ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயா் உத்தரவின்பேரில், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குற்ற வழக்கு வாகனங்களில் கியூஆா் குறியீடு ஒட்டும் பணியை சிதம்பரம் உள்கோட்ட ஏஎஸ்பி ரகுபதியின் ஆலோசனையின்பேரில், நடைமுறைபடுத்தி உள்ளனா். கியூஆா் குறியீடை கைப்பேசியில் ஸ்கேன் செய்து பாா்த்தால், அந்த வாகனங்கள் எந்த வழக்கின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது, அபராதம் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக கைப்பேசி திரையில் காட்டிவிடும்.

மேலும், இந்த வாகனங்களை உரியவா்களிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளா்கள் பரணிதரன், லட்சுமிராமன் மற்றும் போலீஸாா் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனா்.

வியாழக்கிழமை ஒரு டிராக்டா், 2 ஆட்டோக்கள் மற்றும் பைக்குகள், மிதிவண்டி உள்ளிட்ட 28 வாகனங்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள வாகனங்களை உரியவா்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com