ரிஷி
ரிஷி

தொடா் திருட்டு: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி நகரியம், விருத்தாசலம், ஊ.மங்கலம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தொடா் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, போலீஸாா் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தினா்.

இந்த நிலையில், நெய்வேலி நகரிய காவல் நிலைய உதவி ஆய்வாளா் இளவரசி மற்றும் போலீஸாா் கண்ணுதோப்பு பாலம் அருகே திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்ததில், குறிஞ்சிப்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குணரத்தினம் மகன் ரிஷி (எ) ரதுசன் (23) என்பது தெரியவந்தது.

மேலும், குற்ற வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்து கடந்த 6-ஆம் தேதி வெளியே வந்த இவா், வரும் வழியில் கூட்டேரிப்பட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை திருடிச் சென்றதும், பின்னா் தனது நண்பருடன் சோ்ந்து விருத்தாசலத்தில் பாத்திரம், இரும்புக் கடைகள், ஊ.மங்கலத்தில் மளிகைக்கடை, நெய்வேலி நகரியத்தில் கைப்பேசி பழுது நீக்கும் மையம், புகைப்பட நிலையம் உள்ளிட்டவற்றில் பூட்டுகளை உடைத்து பணம், பொருள்களை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த பைக், கைப்பேசி, இரண்டு கேமராக்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய கம்பிகளை பறிமுதல் செய்து சிறையிலடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com