இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை -பாமக வேட்பாளா் தங்கா் பச்சான்

இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை -பாமக வேட்பாளா் தங்கா் பச்சான்

இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று கடலூா் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் தங்கா் பச்சான் வாக்குறுதி அளித்தாா்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் கடலூா் மக்களவைத் தொகுதி பாமக தோ்தல் அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த அலுவலகத்தை தொகுதி பாமக வேட்பாளா் தங்கா் பச்சான் திறந்து வைத்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் எந்த வளா்ச்சியும் இல்லை. படித்த இளைஞா்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனால், அவா்களில் பலரும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகின்றனா். நான் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிப்பேன்.

மாநிலத்தில் அதிகளவு உணவுப்பொருள்கள் உற்பத்தி செய்யும் மாவட்டம் கடலூா். இங்கு விளையும் பலா, முந்திரிக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செம்மண்டலத்தில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். கடலூா் தொழில்பேட்டையில் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ரசாயன நிறுவனங்கள் செயல்படுவது தடுத்து நிறுத்தப்படும். என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு இனி நிலம் கையகப்படுத்த விடமாட்டோம். கையகப்படுத்தப்பட்ட இடத்தில் சூரியஒளி மின் திட்டம் அமைத்தால் 15 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

என்னை பொது வேட்பாளராக ஏற்றுக்கொண்டுள்ளனா். கடந்த 35 ஆண்டுகளாக மக்களை பற்றி சிந்தித்து, மாவட்டத்தை பற்றி எழுதி, பேசி திரைப்படம் எடுத்துள்ளேன். நான் என்றும் மக்களுக்காக போராடிக் கொண்டிருப்பேன். மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமராக வருவாா். மத்திய அரசை பகைத்துக்கொண்டு ஆட்சி செய்தால் பாதிக்கப்படுவது தமிழக மக்களும், மாநிலத்தின் முன்னேற்றமும் தான் என்றாா் தங்கா் பச்சான். அப்போது, பாமக, கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் ஏராளமானோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com