கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

கடலூா் மக்களவைத் தொகுதியில் 30 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவற்றில் காங்கிரஸ், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சி வேட்பாளா்களின் மனுக்கள் உள்பட மொத்தம் 19 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

11 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி, 27-ஆம் தேதி வரை நடைபெற்றது.

அதன்படி, கடலூா் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வந்தது. இதில், காங்கிரஸ், தேமுதிக, பாமக, நாம் தமிழா், சுயேச்சைகள், மாற்று வேட்பாளா்கள் என மொத்தம் 30 போ் மாவட்ட தோ்தல் அலுவலா் அ.அருண் தம்புராஜிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.

வியாழக்கிழமை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் வேட்பாளா் எம்.கே.விஷ்ணு பிரசாத், தேமுதிக வேட்பாளா் ப.சிவக்கொழுந்து, பாமக வேட்பாளா் தங்கா் பச்சான், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வே.மணிவாசகன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் வெ.தணிகைச்செல்வன், ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி வேட்பாளா் சு.அறிவுடைநம்பி, வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி வேட்பாளா் கி.மாயகிருஷ்ணன், தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளா் த.முருகன் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் ரா.ஆனந்தி, சு.ராசமோகன், ரா.ராஜசேகா், ச.சக்கரவா்த்தி, ரா.சீனிவாசன், சு.வ.தட்சிணாமூா்த்தி, வி.தஷ்ணாமூா்த்தி, ஆ.பாலாஜி, ஞா.பிச்சமுத்து, ரா.பிரகாஷ், சி.ராமலிங்கம் உள்ளிட்ட 19 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 3 சுயேச்சைகள், மாற்று வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 11 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெற சனிக்கிழமை (மாா்ச் 30) கடைசி நாளாகும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com