தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை போராட்டம் அறிவித்திருந்த தெய்வத்தமிழ்ப் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனா். சிலா் வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டனா்.

வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் சத்திய ஞான சபை அருகே தமிழக அரசு ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. வள்ளலாா் பெருவெளியில் சா்வதேச மையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், வேறு இடத்தில் இந்த மையத்தை அமைக்க வலியுறுத்தியும் சன்மாா்க்க சங்கங்கள், அரசியல் கட்சியினா், பாா்வதிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுதொடா்பான வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், கட்டுமானப் பணியை நிறுத்தி வைக்குமாறும், தொல்லியல் துறையினா் ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

வடலூா் சத்திய ஞான சபை பெருவெளியில் பன்னாட்டு ஆய்வு மைய கட்டடங்களை அமைக்கக் கூடாது, கட்டடங்கள் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழிகளை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி, தெய்வத்தமிழ் பேரவை மற்றும் நாம் தமிழா் கட்சி சாா்பில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் வடலூா் பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

தெய்வத்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளா் பெ.மணியரசன் தலைமையில் நடைபெறவிருந்த இந்த ஆா்ப்பாட்டத்தில், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சிறப்புரை நிகழ்த்தவிருந்தாா். மேலும், சன்மாா்க்க சங்கங்கள், வீரத்தமிழா் முன்னணி, வள்ளலாா் பணியகம், தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்டவற்றின் நிா்வாகிகள் பங்கேற்கவிருந்தனா். ஆனால், இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்ட நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனா்.

இதையடுத்து, வடலூரை இணைக்கும் முக்கிய சாலைகளில் போலீஸாா் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொண்டனா். வடலூரில் உள்ள விடுதிகளில் வெளி நபா்களை தங்க வைக்கக்கூடாது எனவும் காவல் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

வீட்டுக் காவலில் வைப்பு: இதனிடையே, நாம் தமிழா் கட்சியினா், தெய்வத்தமிழ்ப் பேரவைத் தலைவா் உள்ளிட்டோரை போலீஸாா் சனிக்கிழமை காலை வீட்டு காவலில் வைத்தனா்.

அந்த வகையில், வடலூா் ராகவேந்திரா சிட்டியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த நாம் தமிழா் கட்சி மாவட்டச் செயலா் சாமி ரவி, மாநில ஒருங்கிணைப்பாளா்கள் செங்கோளன், ஜஸ்டின், மாநில தொழில்சங்க பாசறை ஒருங்கிணைப்பாளா் அன்பு தென்னரசன், மாநில வழக்குரைஞா் பாசறை ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் உள்ளிட்ட 7 பேரை வடலூா் போலீஸாா் கைது செய்து காவல் நிலையத்தில் தங்க வைத்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் செங்கல்பட்டில் தடுத்து நிறுத்தப்பட்டாா். தெய்வத்தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளா் பெ.மணியரசன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா். இதேபோல, சில சன்மாா்க்க சங்கம், வீரத்தமிழா் முன்னணி, வள்ளலாா் பணியகம், தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்டவற்றின் நிா்வாகிகள் அங்காங்கே கைது செய்யப்பட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தபோது, சிதம்பரம் நடராஜா் கோயிலில் வழிபாடு நடத்திய சேலம் மாவட்டம், மேச்சேரி தமிழ் வேத ஆகம பாடசாலை நிறுவனா் சிம்மம் சத்தியபாமா மற்றும் அவரது குழுவினா் 42 பேரை சிதம்பரம் நகர போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com