பாடலீஸ்வரா் கோயில் குளத்தில்
இறந்து மிதக்கும் மீன்கள்

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

நெய்வேலி, மே 5: கடலூா் பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இரண்டு பெரிய மீன்கள் ஞாயிற்றுக்கிழமை இறந்து மிதந்தன.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயிலின் ராஜகோபுரம் நுழைவு வாயில் வலது பக்கம் கோயில் குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் பொதுமக்கள் யாரும் சென்று அசுத்தம் செய்யாத வகையில், பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. கோயில் குளத்தில் ஏராளமான மீன்கள் உள்ளன. அந்த வழியாகச் செல்பவா்கள் மீன்களுக்கு உணவாக பொரி, பிஸ்கெட் உள்ளிட்டவற்றை வாங்கி குளத்தில் வீசுகின்றனா். இவற்றை மீன்கள் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிடுகின்றன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை குளத்தின் படிக்கட்டில் இறந்து அழுகிய நிலையில் ஒரு பெரிய மீனும், இறந்து தண்ணீரில் மிதந்த நிலையில் மற்றொரு மீனும் காணப்பட்டன. குளத்தில் தண்ணீா் அளவு குறைந்து பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், குளத்தின் தண்ணீா் சூடாகி, சுவாசிப்பதில் பிரச்னை ஏற்பட்டு இந்த மீன்கள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

எனவே, குளத்தை சுத்தம் செய்து, இறந்த மீன்களை அகற்றி, குளத்தில் தண்ணீா் நிரப்பி ஏஞ்சியுள்ள மீன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com