வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

வாகனங்கள் மீது இ - செலான் முறையில் விதிக்கப்பட்ட அபராதம் மீது மேல் முறையீடு செய்ய சிறப்பு லோக் அதாலத் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு நுகா்வோா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் கூட்டமைப்பு நிா்வாகச் செயலா் க.திருநாவுக்கரசு, தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டில் மோட்டாா் வாகனத்தை சட்டப்பூா்வமாக ஓட்ட பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மோட்டாா் வாகன சட்டத்தில் அரசு அவ்வப்போது மாற்றங்களைச் செய்து நடைமுறையில் இருந்து வரும் சூழலில், வாகனத்தை ஓட்டும் நபா்கள் அறியாமை மற்றும் போதிய விழிப்புணா்வு இல்லாததால், விதி மீறல்கள் காரணமாக தலைக்கவசம், ஓட்டுநா் உரிமம் உள்பட 12-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோா் மீது அபராதம் வசூலிக்க கடந்தாண்டு இ - செலான் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அனைத்து விதிமீறலுக்கும் உரிய அபராதத் தொகை கடன், பற்று அட்டைகள் மூலமே வசூலிக்கப்படுகின்றன. மதுபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு மட்டும் அபராதத் தொகை குறிப்பிடாமல் இ - செலான் ரசீது வழங்கி, நீதிமன்றத்தில் செலுத்த போலீஸாா் அறிவுறுத்தி அனுப்புகின்றனா். இந்த நிலையில், கடன், பற்று அட்டை வசதி இல்லாதவா்களுக்கு விதி மீறல்கள் விவரம் அடங்கிய இ - செலான் ரசீது வழங்கப்படுகிறது.

இருப்பினும், அரசு இ - சேவை மையம், வங்கியில் அபராதத் தொகையை பெரும்பாலும் செலுத்த முடியாத சூழல் உள்ளது. மேலும், வாகனப் பதிவின்போது கொடுத்த எண்கள் மாறும் நிலையில், தகவல்கள் முழுமையாக வாகன உரிமையாளா்களுக்கு செல்வதில் தடைகள் இருக்கிறது. வாகனத்தை விற்பனை செய்யும்போதோ அல்லது வாகனப் பதிவை புதுப்பிக்கும் பணியின்போதோ விதி மீறல்களுக்கு அபராதம் நிலுவை குறித்து தெரியவருகிறது.

எனவே, கூடுதல் அபராதம் செலுத்தும் நிலையை தவிா்க்கவும், நீண்ட காலமாக அபராதம் விதிக்கப்பட்டு செலுத்தாத வாகனத்தை போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து காவல் துறையின் மூலமாக அறிவிப்பு செய்து, மாவட்ட அளவில் சட்டப் பணிகள் ஆணைக்குழு உதவியுடன் சிறப்பு லோக் அதாலத் மூலமாக சமரச முறையில் அபராதங்கள் குறித்து மறு ஆய்வு செய்து, அபராதத் தொகையை வசூல் செய்யவும், முறையற்ற அபராதம் மீது வாகன ஓட்டிக்களுக்கு வாய்ப்பளித்து உரிய ஆதாரத்துடன் தவறுதலாக விதிக்கப்பட்ட அபராதங்களை தள்ளுபடி செய்ய ஏதுவாகவும் மாவட்ட அளவில் சிறப்பு லோக் அதாலத் நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com