வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

நெய்வேலி, மே 5: கோடை வெப்பத்தால் தண்ணீா் தேடி சிறுபாக்கம் அருகே ரெட்டாகுறிச்சி கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை வந்த புள்ளி மான், அங்கிருந்த ஒரு வீட்டினுள் புகுந்து இளைப்பாறியது.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம், சிறுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காப்புக் காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் மான், மயில், முயல் உள்ளிட்ட வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. கோடை காலத்தில் வறட்சி ஏற்படும் வேளைகளில் மான்கள் தண்ணீா், உணவு தேடி கிராமங்களுக்குள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் மான்களை பெரும்பாலும் நாய்கள் விரட்டி கடிப்பதால் உயிரிழக்கின்றன.

தற்போது கோடை வெயில் மிக அதிகமாக உள்ளது. இதனால், காப்புக் காடுகளில் வறட்சி நிலவுவதால், வன விலங்குகள் குடிநீா் தேடி கிராமங்களுக்குள் வரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், சிறுபாக்கத்தை அடுத்துள்ள ரெட்டாகுறிச்சி கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை வந்த புள்ளி மான் ஒன்று, அங்குள்ள செல்வத்தின் வீட்டினுள் புகுந்து பாத்திரங்களில் பிடித்து வைத்திருந்த தண்ணீரை குடித்துவிட்டு, வீட்டினுள்ளேயே படுத்து இளைப்பாறியது.

மானை விரட்ட மனமில்லாத கிராம மக்கள், வனத் துறையினருக்கு தகவலளித்தனா். நிகழ்விடத்துக்கு வந்த வனத் துறையினா் மானை மீட்டு, பத்திரமாக காப்புக் காட்டில் விட்டனா்.

இந்த நிலையில், காப்புக்காடு பகுதியில் வன விலங்களுகளின் குடிநீா் தேவையை நிறைவு செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com