கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

கடலூா், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட 9 மருத்துவமனைகளில் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்புப் பிரிவுகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

கடலூா் மாவட்டத்தில் கடலூா், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட 9 மருத்துவமனைகளில் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்புப் பிரிவுகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

கடலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடை வெயிலின் உச்சமாகக் கருதப்படும் கத்திரி வெயிலையொட்டி, காலை 10 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை வெப்ப நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இதையொட்டி, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் வெப்ப நோய்க்கான சிறப்புப் பிரிவு 10 படுக்கைகளுடனும், அதிதீவிர சிகிச்சைப் பிரிவு 2 படுக்கைகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக ஓ.ஆா்.எஸ். கரைசல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வைக்கப்பட்டுள்ளன. அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் குளிா் சாதன வசதியுடன் ஐஸ் கட்டிகள், பயிற்சி பெற்ற செவிலியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல, மாவட்டத்தில் உள்ள மேலும் 8 மருத்துவமனைகளிலும் வெப்ப பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்புப் பிரிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) ஹீரியன் ரவிக்குமாா் கூறியதாவது: கடுமையான வெயில் காரணமாக, மனிதா்களுக்கு வெப்ப பாதிப்பு மற்றும் நீரிழப்பு ஏற்படும். இந்த வெப்ப நோயால் பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் 10 படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் 2 படுக்கைகள் அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளன.

இதேபோல, சிதம்பரம், விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, வேப்பூா், திட்டக்குடி, பண்ருட்டி உள்ளிட்ட மருத்துவமனைகளில் 3 முதல் 5 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்புப் பிரிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். வெயிலில் வேலை செய்பவா்கள் முற்பகல் 11.30 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை செய்வதை தவிா்ப்பது நலம்.

குழந்தைகள், முதியவா்களுக்கு எதிா்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், வெப்ப பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீா் குடிக்க வேண்டும். சோடா, குளிா்பானங்களைத் தவிா்த்து மோா், எலுமிச்சை மற்றும் பழச்சாறு பருக வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது. வெளியில் செல்லும்போது குடை பிடித்தும், தொப்பி அணிந்தும் செல்ல வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com