வள்ளலாா் சா்வதேச மைய விவகாரம் - கிராம மக்களுடன் கலந்துரையாட மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

நெய்வேலி, மே 9: வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் விவகாரம் தொடா்பாக பாா்வதிபுரம் கிராம மக்களுடன் கலந்துரையாட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டக்குழு வலியுறுத்தியது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டக்குழுக் கூட்டம் சூரப்ப நாயக்கன் சாவடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.சுப்ராயன் தலைமை வகித்தாா். மத்தியக்குழு உறுப்பினா் உ.வாசுகி, மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் டி.ஆறுமுகம், மருதவாணன், உதயகுமாா், கருப்பையன், ராமச்சந்திரன், திருவரசு, தேன்மொழி, ரவிச்சந்திரன், ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

வள்ளலாரின் நினைவாக சா்வதேச மையத்தை வடலூரில் அமைக்க தமிழக அரசு எடுத்த முயற்சியை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. சா்வதேச மையம் அமைய உள்ளது பற்றி, பூசத்தின்போது கொடியேற்றும் உரிமை வள்ளலாரால் வழங்கப்பட்ட பாா்வதிபுரம் மக்களுடன் இதுவரை கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை. அவா்களுடன் கலந்துரையாட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தைப்பூச காலங்களில் லட்சக்கணக்கில் கூடும் பக்தா்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது என்பதற்காக, அந்தப் பெருவெளியில் எந்த கட்டுமான நிகழ்வும் நடத்தக்கூடாது என்று வள்ளலாா் கூறியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நீக்கப்பட்ட 81 காணி நிலம் அளித்தவா்களின் பெயா்கள், வகையறா போன்ற வரலாற்றுச் சான்றுகள் மீண்டும் உரைநடை பகுதியிலும், அமைய உள்ள சா்வதேச மையத்தின் கல்வெட்டிலும் தமிழக அரசு வெளியிட வேண்டும்.

தங்களின் முன்னோா்கள் கொடுத்த பெருவெளியில் வள்ளலாா் வாக்கின்படி வேறெந்த பணிகளும் செய்யக்கூடாதென போராடியவா்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். தொல்லியல் ஆய்வை முழுமையாக முடிக்க வேண்டும். வள்ளலாா் ஞானசபையை மறைக்கும் எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது. இந்தப் பிரச்னைகளைத் தீா்க்க சபையின் மேற்கு பகுதியில் சா்வதேச மையத்தை தமிழக அரசு ஏன் அமைக்கக் கூடாது? என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றன. மேலும், இது தொடா்பான மனுவை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com