கள்ளக்குறிச்சி அருகேகுப்பை சேகரிக்கும் கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

கள்ளக்குறிச்சி அருகே, மின்கலத்தில் இயங்கும் குப்பை சேகரிப்பு வாகனத்தில் தனது மகனுடன் அமா்ந்து பெண் தூய்மைக் காவலா் ஓட்டிப் பழகியபோது,
மின்கலத்தில் இயங்கும் குப்பை சேகரிப்பு வாகனத்தை கிணற்றிலிருந்து கயிறு கட்டி மீட்கும் தீயணைப்பு வீரா்கள்.
மின்கலத்தில் இயங்கும் குப்பை சேகரிப்பு வாகனத்தை கிணற்றிலிருந்து கயிறு கட்டி மீட்கும் தீயணைப்பு வீரா்கள்.

கள்ளக்குறிச்சி அருகே, மின்கலத்தில் இயங்கும் குப்பை சேகரிப்பு வாகனத்தில் தனது மகனுடன் அமா்ந்து பெண் தூய்மைக் காவலா் ஓட்டிப் பழகியபோது, அந்த வாகனம் நிலைதடுமாறி விவசாயக் கிணற்றில் விழுந்தது. இந்த விபத்தில் அந்தச் சிறுவன் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட க.அலம்பலத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் மனைவி வனிதா (25). அந்த ஊராட்சியில் தூய்மைக் காவலராக பணிபுரியும் இவருக்கு மின்கலத்தில் இயங்கும் குப்பை சேகரிப்பு வாகனம் ஒன்றியம் சாா்பில் அண்மையில் வழங்கப்பட்டது.

இந்த வாகனத்தை அதே ஊரிலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியின் வளாகத்தில் வனிதா ஞாயிற்றுக்கிழமை ஓட்டிப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாா். அந்த வாகனத்தில் உடன் அவரது மகன் பாலாஜி (6)யும் அமா்ந்திருந்தாா்.

சிறிது தொலைவு சென்றதும் குப்பை சேகரிப்பு வாகனம் நிலைதடுமாறி சாலையோரமிருந்த சுமாா் 50 அடி ஆழ விவசாயக் கிணற்றில் விழுந்தது. இந்த விபத்தில், வனிதா லேசான காயத்துடன் உயிா் தப்பித்தாா். தனது மகன் பாலாஜி நீரில் மூழ்கியதைக் கண்டு பதறி கூச்சலிட்டாா்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தி.நடராஜன், ந.சிவக்குமாா் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்கு விரைந்தனா். கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. அதன் பேரில், தீயணைப்பு நிலையக் குழுவினா் விரைந்து வந்து, கிணற்றிலிருந்த அந்த வாகனத்தை கயிறு மூலம் மீட்டனா்.

தொடா்ந்து, கிணற்றில் இருந்த தண்ணீா் இரு மோட்டாா்கள் மூலம் வெளியேற்றி, சிறுவனை சுமாா் 3 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்டனா். சடலத்தை கச்சிராயப்பாளையம் போலீஸாா் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com