சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி வரை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் மும்முரம்

கள்ளக்குறிச்சி, நவ.13: கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி வரை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கள்ளக்குறிச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டப் பணிகளை தொடங்குவதற்கு தமிழக அரசால் கடந்த 2016-ஆம் ஆண்டு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் சின்னசேலம் வட்டத்தில் 2 கிராமங்களும், கள்ளக்குறிச்சி வட்டத்தில் 9 கிராமங்களும் என மொத்தம் 11 கிராமங்கள் அடங்கும். இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதம் சென்னை உயா் நீதிமன்ற தீா்ப்பின்படி அந்தப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடா்ந்து, கடந்தாண்டு டிசம்பா் மாதம் உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

11 கிராமங்களில் சின்னசேலம் (வடக்கு), பொற்படாக்குறிச்சி, கீழ்பூண்டி, வினைத்தீா்த்தாபுரம், கனியாமூா் ஆகிய 5 கிராமங்களில் மொத்தம் 14.81 ஹெக்டோ் (36.58 ஏக்கா்) நிலம் கையகப்படுத்தப்பட்டு நில உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதில், சின்னசேலம் (வடக்கு) கிராமத்தில் தற்போது ரயில்வே துறையால் புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் அமையவுள்ள அகல ரயில் பாதையில் ரயில்வே துறையால் 2 பெரிய பாலங்களும், 23 சிறிய பாலங்களும் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கள்ளக்குறிச்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரையிலான புதிய அகல ரயில் பாதை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com