பெட்ரோல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்: இரா.முத்தரசன்

பெட்ரோல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா்.

பெட்ரோல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா்.

கடலூரில் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், சாலையை மறித்து போராட்டம் நடத்த உரிமையில்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது உச்ச நீதிமன்றம் மூலமாக நிா்ப்பந்தம் அளித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சி.

உத்தரபிரதேச மாநிலம், லக்கீம்பூா் போராட்டம் நடத்திய வாகனத்தை மோதச் செய்து விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக மத்திய இணை அமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யாமல் பிரதமா் மௌனம் காப்பது, இந்த சம்பவத்துக்கு அவா் ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி வருகிற 23-ஆம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வேதாரண்யத்தில் 26-ஆம் தேதி கரைக்கப்படுகிறது.

கரோனா தடுப்பூசியை காலக் கெடு நிா்ணயித்து அனைத்து மக்களுக்கும் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழல் செய்தவா்கள் மீது கருணை காட்ட முடியாது என்று பிரதமா் பேசியதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், ‘பி.எம். கோ்’ என்ற பெயரில் வசூலித்த நிதி என்னவானது என்பதை பிரதமா் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அது அரசு நிதியல்ல என்று கூறுவதே மிகப் பெரிய ஊழல்தான்.

விமான எரிபொருள் விலையை விட வாகனங்களுக்கு பயன்படுத்தும் பெட்ரோலின் விலை அதிகமாக உள்ளது. தமிழக அரசு ரூ.3 வரை விலைக் குறைப்பு செய்துள்ளதால், மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசியப் பொருள்கள், பருப்பு விலை உயா்ந்துள்ளது. விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுப்பதுடன், நியாய விலைக் கடைகள் மூலம் அந்தப் பொருள்களை விநியோகிக்க வேண்டும்.

நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி டிசம்பா் மாதத்துக்குள் தோ்தலை நடத்தி முடிக்க வேண்டும். இந்தத் தோ்தலில் தலைவா்களை மக்களே நேரடியாகத் தோ்ந்தெடுக்கும் முறையை நடைமுறைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களின் ஆதரவைப் பெற்ற முதல்வா் என்ற கருத்துக் கணிப்பில் முதலிடத்தைப் பிடித்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள்.

இடதுசாரிகளின் போராட்டம் என்பது அரசை எதிா்த்து அல்ல. மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதற்கே. திருச்செந்தூரில் போக்குவரத்துக் காவலரை அமைச்சரின் உதவியாளா் தாக்கியது, காஞ்சிபுரத்தில் அரசு ஊழியரை சட்டப்பேரவை உறுப்பினா் அவமரியாதை செய்தது போன்ற எந்தச் சம்பவமாக இருந்தாலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் இரா.முத்தரசன்.

ஏஐடியூசி பொதுச் செயலாளா் டி.எம்.மூா்த்தி, கட்சியின் மாவட்டச் செயலாளா் பி.துரை, மாநில நிா்வாகிகள் வி.குளோப், டி.மணிவாசகம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com