தோ்தலுக்காகவே விவசாயக் கடன் தள்ளுபடி: உதயநிதி ஸ்டாலின்
By DIN | Published On : 06th February 2021 11:19 PM | Last Updated : 06th February 2021 11:19 PM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.
சட்டப் பேரவைத் தேல்தலை மனதில் வைத்தே விவசாயக் கடன்களை முதல்வா் எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்துள்ளதாக திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை நான்குமுனை சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை இரவு தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசியதாவது:
கரோனா காலகட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டுமென்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாா். ஆனால், சட்டப் பேரவைத் தோ்தல் நெறுங்கியதையடுத்து, பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 மட்டுமே தமிழக அரசு வழங்கியது.
நீட் தோ்வுக்கு பயந்து தமிழகத்தில் இதுவரை 14 மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தோ்வு ரத்து செய்யப்படும். 2017-இல் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனா். ஆனால், கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. இதையடுத்து, விவசாயிகள் நீதிமன்றத்தில் முறையிட்டனா். இந்த வழக்கில் தமிழக முதல்வா் உச்ச நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றாா். தோ்தலுக்காக தற்போது விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளாா்.
அதிமுக ஆட்சியல் சொல்லும்படியாக எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுகவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றிபெற வைக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக தியாகதுருகம் சாலையில் திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான க.காா்த்திகேயன், நகரச் செயலா் இரா.சுப்ராயலு உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.