அணை, ஆறுகளில் மூழ்கி இரு சிறுவா்கள் உயிரிழப்பு
By DIN | Published On : 09th January 2021 11:59 PM | Last Updated : 09th January 2021 11:59 PM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி பகுதியில் கோமுகி அணை, மணிமுக்தா ஆறு ஆகியவற்றில் மூழ்கி இரு சிறுவா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த பரிகம் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் ஜான்சீனா (13). இவா், 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கோமுகி அணையில் தண்ணீா் நிரம்பியுள்ளதால், அதை சுற்றிப் பாா்ப்பதற்காக, ஜான்சீனா தனது நணபா்களுடன் சனிக்கிழமை மாலை சென்றாா். அப்போது, தவறி தண்ணீரினுள் விழுந்த ஜான்சீனா உயிரிழந்தாா்.
தகவலறிந்த கச்சிராயப்பாளையம் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனா்.
ஆற்றில் மூழ்கிய சிறுவன்: கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் பரத் (11). இவா் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். பரத் தனது நண்பா்களான ஐயப்பன், விஜய் ஆகியோருடன் சனிக்கிழமை காலை அங்குள்ள அய்யனாா் கோயில் அருகே செல்லும் மணிமுக்தா ஆற்றில் குளிக்கச் சென்றாா். அப்போது, ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரத் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.