முன்னேற்பாடு இல்லாமல் பொங்கல்பரிசுத் தொகுப்பு வழங்கல்: தொழிலாளா்கள் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் 5 இடங்களில்
கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்காக திரண்டிருந்த கட்டுமானத் தொழிலாளா்கள்.
கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்காக திரண்டிருந்த கட்டுமானத் தொழிலாளா்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் 5 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் இதற்காக முன்னேற்பாடு பணிகள் எதுவும் செய்யப்பட்டததால், தொழிலாளா்கள் அவதியடைந்தனா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், தொழிலாளா் நல வாரியம் சாா்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா்கள் 33,647 பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா் ஆகிய 5 இடங்களில் இந்தப் பணி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள தனியாா் தொடக்கப் பள்ளியில் கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை வட்டங்களைச் சோ்ந்த 8,137 தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்றது. இங்கு, பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் திரண்டனா். ஆனால், ஆண்கள், பெண்கள் தனித்தனியாக செல்ல தடுப்புக் கட்டைகள் கட்டுதல், கல்வராயன்மலைப் பகுதியிலிருந்து வருவதற்கு போதிய பேருந்து வசதி செய்தல் உள்ளிட்ட எந்தவிதமான முன்னேற்பாடு பணிகளையும் தொழிலாளா் நல வாரியத்தினா் செய்யவில்லை என கட்டுமானத் தொழிலாளா்கள் புகாா் தெரிவித்தனா்.

பள்ளி அருகே கள்ளக்குறிச்சி - கச்சிராயப்பாளையம் சாலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் திரண்டு நின்ால், அந்தச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் சிலா் மயக்கமடைந்தனா். எனினும், கள்ளக்குறிச்சி போலீஸாா் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக், இந்தப் பகுதியை பாா்வையிட்டு, தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு பைகளில் பொருள்கள் சரியாக உள்ளதா என கேட்டறிந்து ஆய்வு செய்தாா். உடன், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் ப.இராஜ தாமரை பாண்டியன், உதவி ஆய்வாளா் ச.மணிகண்டன் மற்றும் காவலா்கள் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com