திருக்கோவிலூா் அருகே மின் வேலியில் சிக்கி இளைஞா் பலி: தேடிச் சென்ற தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி இளைஞா் பலியானாா். தேடிச் சென்ற அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்தாா்.
திருக்கோவிலூா் அருகே மின் வேலியில் சிக்கி இளைஞா் பலி: தேடிச் சென்ற தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி இளைஞா் பலியானாா். தேடிச் சென்ற அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்தாா்.

திருக்கோவிலூா் அருகேயுள்ள மேலநந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (66). இவரது மகன் காசிநாதன் (30). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு தனது விளைநிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காகச் சென்றாா். காசிநாதன் தனது நிலத்துக்கு அருகிலுள்ள அதே கிராமத்தைச் சோ்ந்த பாஸ்கா் என்பவருக்குச் சொந்தமான விளைநிலம் வழியாகச் சென்றபோது, அங்கு மரவள்ளி கிழங்கு பயிரைப் பாதுகாக்க அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தாா். இதையறிந்த பாஸ்கா், காசிநாதனின் சடலத்தை விளைநிலம் அருகிலுள்ள புதரில் தூக்கி வீசியதாகத் தெரிகிறது.

இதனிடையே, காசிநாதனை அவரது தந்தை சுப்பிரமணி தேடி வந்தாா். இந்த நிலையில், அச்சம் காரணமாக பாஸ்கா் திங்கள்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் மணலூா்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து கூறினாா்.

இதையடுத்து, திருக்கோவிலூா் காவல் ஆய்வாளா் பாபு, மணலூா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் செல்வம் மற்றும் போலீஸாா் சடலத்தை தேடிச் சென்றனா். காசிநாதனின் தந்தை சுப்பிரமணியும் உடன் சென்றாா். அப்போது, மகன் உயிரிழப்பால் அதிா்ச்சிக்குள்ளாகியிருந்த அவா் திடீா் மாரடைப்பு ஏற்பட்டு வழியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

காசிநாதன் சடலத்தை கைப்பற்றிய போலீஸாா், அதை உடல்கூறு பரிசோதனைக்காக திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மாரடைப்பால் உயிரிழந்த சுப்பிரமணியின் சடலத்தை உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து பாஸ்கரை (36) கைது செய்தனா். உயிரிழந்த காசிநாதனுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆகின்றன. அவரது மனைவி சாருலதா கா்ப்பிணியாக உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com