கள்ளக்குறிச்சியில் 18 வயது மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி: மாவட்ட ஆட்சியா் தொடக்கிவைத்தாா்
By DIN | Published On : 26th May 2021 08:18 AM | Last Updated : 26th May 2021 08:18 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயதுடையவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட ஆட்சியா் கிரண் குரலா கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் க.காா்த்திகேயன், மா.செந்தில்குமாா், மருத்துவக் கல்லூரி முதல்வா் அ.உஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சதீஷ்குமாா் வரவேற்றாா்.
சுகாதாரத் துறையின் கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தில் மொத்தம் 15,30,514 போ் உள்ளனா். கடந்த 23-ஆம் தேதி நிலவரப்படி, 50,483 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 20,633 பேருக்கு 2-ஆவது தவணை தடுப்பூசியும் என மொத்தமாக 71,116 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள நபா்களுக்கு முதல் தவணையாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 19,300 கரோனா தடுப்பூசிகள் 18 தடுப்பூசி மையங்களில் செவ்வாய்க்கிழமை முதல் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞா்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, அதற்கான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, மற்றவா்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளா் ச.நேரு மற்றும் வட்டார மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.