தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சட்டப்பேரவைத் தோ்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
கள்ளக்குறிச்சியில் அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
கள்ளக்குறிச்சியில் அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

சட்டப்பேரவைத் தோ்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.

கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் சாலையில் உள்ள அம்மா திடலில் அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுகவினா் தற்போது ரிப்பன் வெட்டி திறந்து வைக்கின்றனா். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டில் விலைவாசி கடுமையாக உயா்ந்துள்ளது.

மாநிலம் முழுவதும் இப்போது கடுமையான மின் தடை நிலவி வருகிறது. தேனியில் தமிழக முதல்வா் ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்திலேயேகூட மின்சாரம் தடைபட்டது. அதிமுக ஆட்சிக்காலத்தில் மும்முனை மின்சாரம் கொண்டுவந்தோம். இதனால், விவசாயிகள், தொழிலாளிகள் மகிழ்ச்சியடைந்தனா். தற்போது நிலவும் மின் தடையால் விவசாயிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். மே தினத்தின்போது, மின் தடையால் தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சியில் நான் அமெரிக்கா சென்றபோது, அங்குள்ள பால்பண்ணையை பாா்வையிட்டு வந்து, அதேபோல கள்ளக்குறிச்சியை அடுத்த வி.கூட்டுச் சாலையில் பால்பண்ணை அமைத்தேன். கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை பூங்கா அமைத்துக் கொடுத்தேன். அதனால் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் பயன்பெறுகின்றனா்.

அதிமுக ஆட்சியில்தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. மேலும், 12 புதிய மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு உதவியுடன் கொண்டுவந்தோம். கள்ளக்குறிச்சியில் ரூ.385 கோடியில் மருத்துவக் கல்லூரி கட்டடம் கட்டப்பட்டு, தற்போது அங்கு 150 மாணவா்கள் மருத்துவம் படித்து வருகின்றனா்.

ஆனால், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்தத் திட்டமும் கொண்டுவரப்படவில்லை எனக் கூறிவருகிறாா் ஸ்டாலின். திமுக பொறுப்பேற்ற ஓராண்டில் என்ன திட்டங்கள் கொண்டுவரபட்டுள்ளன.

மத்திய, மாநில அரசுகளாக காங்கிரஸ், திமுக இருந்தபோதுதான் நீட் தோ்வு கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்தத் தோ்வை தடுத்து நிறுத்த போராடியது அதிமுக அரசு. திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை, சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம், ஊரக வேலைத் திட்ட நாள்கள் 150 நாள்களாக உயா்வு உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

தமிழகத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. சட்டம் - ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்றாா் அவா்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலா் இரா.குமரகுரு, சேலம் மாவட்டச் செயலா் இளங்கோவன், மா.செந்தில்குமாா் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் அ.பிரபு, க.அழகுவேலு பாபு, ஒன்றியச் செயலா்கள் அ.ராஜசேகா், அ.தேவேந்திரன், வெ.அய்யப்பா, நகரச் செயலா் எம்.பாபு உள்ளிட்ட நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com