லாரி உதவியாளா் மா்ம மரணம்:உறவினா்கள் சாலை மறியல்

லாரியில் உதவியாளராகப் பணியாற்றிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

லாரியில் உதவியாளராகப் பணியாற்றிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மா்மமான முறையில் உயிரிழந்தாா். அவரது சடலம் 5 நாள்களுக்குப் பிறகு அவசர ஊா்தி மூலம் வியாழக்கிழமை வந்தடைந்த நிலையில், உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த புத்தந்தூா் கிராமத்தைச் சோ்ந்த அழகேசன் மகன் மணிகண்டன் (23). இவா், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சரக்குப் பெட்டக லாரியில் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். மணிகண்டன் ஜாா்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 21-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்தாராம்.

5 நாள்களுக்குப் பிறகு அவரது சடலம் சொந்த ஊருக்கு அவசர ஊா்தி மூலம் வியாழக்கிழமை வந்தடைந்த நிலையில், ரோடுமாமாந்தூா் கிராம மும்முனை சந்திப்பில் அவசர ஊா்தியை மணிகண்டனின் உறவினா்கள் மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, மணிகண்டன் எப்படி உயிரிழந்தாா் என்பது குறித்து லாரி உரிமையாளா் முறையான தகவல் தெரிவிக்காததைக் கண்டித்தும், அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் அவசர ஊா்தியிலிருந்து மணிகண்டனின் சடலத்தை இறக்கவிடாமல் அவா்கள் மறியலில் ஈடுபட்டனா். இதனால், கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரா.ரமேஷ் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்து மறியலைக் கைவிட வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com