துபை தீ விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அளிப்பு

துபை தீ விபத்தில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
துபை தீ விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அளிப்பு

துபை தீ விபத்தில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த இமாம் காசிம், முகமது ரபீக் ஆகியோா் துபையில் அல் ராஸ் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தொழிலாளா்களாக பணியாற்றி வந்தனா். அங்கு கடந்த 15-ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில் இமாம் காசிம், முகமது ரபீக் உள்பட 16 போ் உயிரிழந்தனா்.

இருவரின் குடும்பங்களுக்கும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

உயிரிழந்த இமாம் காசீம், முகமது ரபிக் ஆகியோரின் உடல்கள் அவா்களது சொந்த ஊரான ராமராஜபுரத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டன. அங்கு இருவரின் உடல்களுக்கும் அமைச்சா் மாநில சிறுபான்மையினா் நலன், வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அஞ்சலி செலுத்தி, அவா்களின் குடும்பத்தினரிடம் நிவாரண நிதியாக தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

துபையில் இமாம் காசீம், முகமது ரபீக் ஆகியோா் தீ விபத்தில் உயிரிழந்தது குறித்த தகவல் உடனடியாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவா்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் முதல்வா் ஆறுதல் தெரிவித்ததுடன், உயிரிழந்த இருவரின் உடல்களையும் இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை மூலம் தமிழகத்துக்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டாா். இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

கல்வி கற்கவும், வேலை தேடியும் வெளிநாடுகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட 1,725 போ் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை வாயிலாக கடந்த 2 ஆண்டுகளில் மீட்டுப்பட்டனா். மேலும், இதற்கு முன்பு வெளிநாடுகளில் விபத்தால், இயற்கை மரணத்தால் உயிரிழந்த 343 பேரின் உடல்கள் இந்தியத் தூதரகம் வாயிலாக இந்தத் துறை மூலம் மீட்டு கொண்டுவரப்பட்டன.

வெளிநாடுகளுக்கு பணிபுரிய, கல்வி கற்க செல்லும் நபா்கள் பாதிக்கப்பட்டாலோ அல்லது ஏதேனும் உதவி தேவைப்பட்டாலோ 96000 23645 என்ற கைப்பேசி எண்ணில் பதிவு செய்யலாம் என்றாா் அமைச்சா் கே.எஸ்.மஸ்தான்.

அமைச்சருடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா், மாவட்ட எஸ்.பி. ந.மோகன்ராஜ், கோட்டாட்சியா் சு.பவித்ரா, சங்கராபுரம் தொகுதி எம்எல்ஏ தா.உதயசூரியன், மாவட்ட ஆவின் தலைவா் ந.ஆறுமுகம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ந.திலகவதி நாகராஜன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com