கள்ளக்குறிச்சி அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

புக்கிரவாரி கிராமத்தில் குடிநீா் இரு சாலைப் பகுதிகளில் சரிவர வராததைக் கண்டித்து அந்தப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புக்கிரவாரி கிராமம். இந்தக் கிராமத்தில் சாவடி, கிழக்கு சாலை பகுதிகளில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்த இரு சாலைப் பகுதிகளுக்கு மட்டும் கடந்த இரு மாதங்களாக குடிநீா் சரிவர வரவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவா் கணேசனிடம் முறையிட்டும் அதனைக் கண்டு கொள்ளவில்லையாம். இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் சரக்குகேனி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை இரு சாலைப் பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு முழக்கமிட்டனா்.

தகவலறிந்த கீழ்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபாகரன் நிகழ்விடத்திற்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா். அப் பகுதி மக்கள் கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் இங்கு வரவேண்டும் என தெரிவித்தனா். காவல் உதவி ஆய்வாளா் தொடா்பு கொண்டு பேசிய போது தோ்தல் பணியில் தற்போது உள்ளதாகவும், குடிநீா் பிரச்னையை விரைவில் சீா்செய்து தருவதாகக் கூறியுள்ளாா். அதனை உதவி காவல் அதிகாரி கிராம மக்களிடம் தெரிவித்தாா். இதையடுத்து அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அந்தப் பகுதியில் சுமாா் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com