குழந்தைகள் நலனை முன்னிலைப்படுத்தி தேர்தல் அறிக்கை

 புதுச்சேரி, மே.2: குழந்தைகள் நலனை முன்னிலைப்படுத்தி தேர்தல் அறிக்கையை ஹோப் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரசாரம் அமைப்பு வெளியிட்டது.  அந்த அறிக்கை விவரம்:  தேசத்தின் வளர்ச்சிக

 புதுச்சேரி, மே.2: குழந்தைகள் நலனை முன்னிலைப்படுத்தி தேர்தல் அறிக்கையை ஹோப் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரசாரம் அமைப்பு வெளியிட்டது.

 அந்த அறிக்கை விவரம்:

 தேசத்தின் வளர்ச்சிக்கு குழந்தை உரிமைகளை ஒரு முக்கிய அளவுகோலாக்க வேண்டும். குழந்தைகளின் நிலை மற்றும் அவர்கள் தங்களின் உரிமைகளை அனுபவிக்கிறார்களா என்பதை கணக்கிட்டு அதன் அடிப்படையில் தேசத்தின் வளர்ச்சியைக் கணக்கிட வேண்டும்.

 அனைத்து சட்ட, நிர்வாக, நீதித்துறை முடிவுகள், கொள்கைகள், நிதிநிலை அறிக்கைகளை ஆகியவை குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவை குழந்தைகள் நலன் அடிப்படையில் இருக்க வேண்டும்.

 18 வயது வரை உள்ள அனைவருக்கும் குழந்தைகள் என்று அங்கீகரிக்க வேண்டும். ஐக்கிய நாடுகளின் குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கையின் தொடர்ச்சியாக குழந்தைகள் பாதுகாப்பு, வளர்ச்சி, உயிர் மற்றும் வாழ்வாதாரம், உயிர்வாழ்தல் மற்றும் பங்கேற்பு உரிமைகளை வழங்குவதற்கான அரசியல் அமைப்புச் சட்டத்திலும் பிற சட்டத்திலும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.

 குழந்தைகள் கருத்துகளை வெளிப்படுத்த சங்கம் அமைக்க, தகவல் பெற, அவர்கள் வாழ்வை பாதிக்கும் கொள்கை முடிவுகளில் பங்கெடுக்க குழந்தைகளுக்கு உள்ள உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். குழந்தைகள் பங்கேற்பை மதித்து உற்சாகப்படுத்த வேண்டும்.

 1992-ல் இந்தியா கையெழுத்திட்ட ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கையில் உள்ளவற்றை நிறைவேற்றவும் அரசியல் சாசன பாதுகாப்பை தேசிய அளவில் உறுதிப்படுத்தவும் ஒரு புதிய தேசியக் கொள்கை குழந்தைகளுக்காக உருவாக்கப்பட வேண்டும்.

 18 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய, தரமான சமமான கல்வியை உத்தரவாதப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும்.

 குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளும் தடை செய்யப்பட வேண்டும். குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடை செய்ய வேண்டும்.

 ஒவ்வொரு குழந்தைக்கும் சத்தான உணவை உறுதி செய்யும் வகையில் வீட்டில் உள்ளவர்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

 காங்கிரஸ் துணைத் தலைவர் மா. இளங்கோ, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் வேட்பாளர் சோ. பாலசுப்பிரமணியன், அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளர் கலியமூர்த்தி, சுயேச்சை வேட்பாளர்கள் சரவணன், சிவராமன், வீரமுத்து, சிட்டிபாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com