புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சிக்கு மதிப்பெண் கொடுக்கும் தேர்தல்

புதுச்சேரி, மே 10:   "நாற்பதும் நமதே' என்று திமுக மற்றும் அதிமுக அணியினர் தேர்தல் பிரசாரத்தில் முழக்கமிட்டு வருகின்றனர்.   தமிழகத்தில் உள்ள 39-ஐ தவிர்த்து புதுச்சேரியில் உள்ள ஒரே மக்களவைத் தொகுதியைச்

புதுச்சேரி, மே 10:   "நாற்பதும் நமதே' என்று திமுக மற்றும் அதிமுக அணியினர் தேர்தல் பிரசாரத்தில் முழக்கமிட்டு வருகின்றனர்.

  தமிழகத்தில் உள்ள 39-ஐ தவிர்த்து புதுச்சேரியில் உள்ள ஒரே மக்களவைத் தொகுதியைச் சேர்த்துதான் இந்த நாற்பது.

  இந்த 40-ல் ஒரே மக்களவைத் தொகுதியாக இருக்கும் புதுச்சேரி தொகுதியின் வெற்றி, தோல்வி இங்கு ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசுக்கு மக்கள் கொடுக்கும் மதிப்பெண்ணாக அமைய உள்ளது.

  காங்கிரஸ் ஆட்சியின் முதல்வராக இருந்த ரங்கசாமி மாற்றப்பட்டு இப்போது வைத்திலிங்கம் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக புதுச்சேரியில் இப்படி மாற்றத்துக்கு காங்கிரஸ் தலைமை அனுமதி அளித்திருந்தது.

  முதல்வர் பதவியில் இருந்து ரங்கசாமியை இறக்க மத்திய அமைச்சரும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலருமான வி. நாராயணசாமி தான் காரணம் என்று ரங்கசாமியும் அவரது ஆதரவாளர்களும் நினைக்கின்றனர்.

  இந்நிலையில் இப்போது காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார் நாராயணசாமி.

  "யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்' என்பதைப் போன்று இப்போது தேர்தல் காலத்தை நாராயணசாமிக்கு சோதனைக் காலமாக மாற்றியிருக்கின்றனர் ரங்கசாமியும் அவரது ஆதரவாளர்களும்.

  2, 3 முறை ரங்கசாமியை நாராயணசாமி சந்தித்தப் பிறகும் மனம் மாறவில்லை. தேர்தல் பிரசாரத்துக்கும் வரவில்லை. ஞாயிற்றுக்கிழமையும் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது. இறுதி நாளில் ரங்கசாமி பிரசாரத்துக்கு வருவார் என்று நாராயணசாமி ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

  புதுச்சேரிக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலரும் கட்சியின் புதுச்சேரிக்கான பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத்தை ரங்கசாமி சந்தித்துப் பேசியுள்ளார். அதன் பிறகும் ரங்கசாமி மசியவில்லை. புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருவதாக இருந்து திடீரென்று ரத்தாகிவிட்டது. அவர் வந்திருந்தால் அந்த மேடைக்கு ரங்கசாமி வந்திருப்பார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

  கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்கால் பகுதி காங்கிரஸின் காலை வாரியது. அதனால் காரைக்கால் பகுதியில் தேர்தல் பணிகளை காங்கிரஸ் மும்முரமாக கவனித்து வருகிறது.

  18 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து வருகிறார் நாராயணசாமி. இப்போது முதல் முதலாக நேரடி தேர்தலைச் சந்திக்கிறார். அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைவராக இருக்கும் அவருக்கு இத் தேர்தல் வாழ்வா, சாவா பிரச்னையாக மாறியிருக்கிறது. இதைத் தவிர புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு மக்கள் மதிப்பெண் அளிக்கும் தேர்தலாகவும் இது அமைய உள்ளது.

  தேர்தலுக்குப் பிறகு புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் என்று நாராயணசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

  பாமக வேட்பாளர் பேராசிரியர் மு.ராமதாஸýம் காரைக்கால் பகுதி வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் அதிகம் ஈடுபட்டுள்ளார்.

  இதைத் தவிர ரங்கசாமியின் அதிருப்தியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள பாமக மற்றும் அதிமுக கூட்டணியினர் பிரசாரத்தில் ஓர் உத்தியாகப் பயன்படுத்தி வருகின்றனர். புதுச்சேரியின் முதல் பாமக எம்.பி. பேராசிரியர் மு.ராமதாஸ். 5 ஆண்டுகள் தன்னுடைய பணியைப் பார்த்து வாக்கு அளிக்குமாறு அவர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

  காரைக்கால் பகுதி வாக்குகளைப் பெறுவதற்காகவே தேமுதிக அப் பகுதியைச் சேர்ந்த அசனாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அதனால் அப் பகுதி வாக்குகள் பிரிய வாய்ப்பு இருக்கிறது.

  புதுச்சேரி வாக்காளர்கள் எப்போதும் ஜாதி, மதம் பார்த்து வாக்குப் போடுவதில்லை என்பதைக் கடந்த கால தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. அதனால் வன்னியர் வாக்குகள் முழுவதும் பாமகவுக்கு போய்ச் சேரும் என்றும் சொல்வதற்கில்லை.

  பாமக வேட்பாளர் பேராசிரியர் ராமதாஸ் மீனவர். காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி கிராமணி. இவர்கள் இரண்டு பேரையும் ஜாதி அடிப்படையில் அக் கட்சிகள் வேட்பாளர்களாக நிறுத்தவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com