மீண்டும் அமலாகிறது ஏரிகள் புனரமைப்புத் திட்டம்

புதுச்சேரியில் ஏரிகள் புனரமைப்புத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் அமலாகிறது ஏரிகள் புனரமைப்புத் திட்டம்

புதுச்சேரியில் ஏரிகள் புனரமைப்புத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் ஐரோப்பிய யூனியன் நிதியில் முன்பு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதைப் போல தற்போதும் இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசு போதிய நிதி ஒதுக்குமா என்ற கேள்வி அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது.

புதுச்சேரி மாநிலம் தற்போது நிலத்தடி நீர் பாசனத்தை மட்டுமே நம்பியிருக்கும் மாநிலமாக உள்ளது.  காவிரியில் தண்ணீர் வராததால், அதன் கடைமடைப் பகுதியான காரைக்கால் பிராந்தியமும் கடும் வறட்சியைக் கண்டுள்ளது.  மாஹே, யேனம் பிராந்தியங்களிலும் இதே நிலைதான் உள்ளது.

கடந்த 1976-ம் ஆண்டு வரை புதுச்சேரியில் ஏரி நீர்ப் பாசனம் அமலில் இருந்தது.   84 ஏரிகளில் இருந்து சுமார் 6,454 ஹெக்டேர் பாசனப் பரப்புகள் நீரைப் பயன்படுத்தி வந்தன.  அதன் பிறகு, ஏரிகளை பஞ்சாயத்துகள் சரிவர பராமரிக்காத காரணத்தால், விவசாயிகள் கிணற்றுப் பாசனத்துக்கும், ஆழ்குழாய்க் கிணற்றுப் பாசனத்துக்கும் மாறினர்.  இதனால், புதுச்சேரி மாவட்டத்தில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்வது அதிகமானது. அச்சமயத்தில்  கடல் நீர் உள்புகுந்து நிலத்தடி நீரில் உப்பின் தன்மை அதிகமானது.

முதல் ஏரிகள் புனரமைப்புத் திட்டம்:

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் ஏரிகள் புனரமைப்புத் திட்டம் புதுச்சேரியில் கடந்த 1997-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.  இதற்கான ஒப்பந்தம், இந்திய அரசோடு அதே ஆண்டில் கையெழுத்தானது.

இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.34.73 கோடி. இதில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு ரூ.28.13 கோடி. புதுச்சேரி அரசின் பங்கு ரூ.4.40 கோடி. விவசாயிகள் பங்களிப்பு ரூ.2.20 கோடி எனத் திட்டமிடப்பட்டது.  இத்திட்டத்தின் மூலம் ஏரிகளுக்கான நீர்வரத்துப் பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வாய்க்கால்கள் சீர்படுத்தப்பட்டன. ஏரிகள் தூர்வாரப்பட்டன.

வாதனூரில் மட்டும் 160 ஏக்கர் ஆக்கிரமிப்புகளை விவசாயிகள் மீட்டனர். 12 ஆழ்குழாய்க் கிணறுகளை அகற்றினர். இதனால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்தது. நிலத்தடி நீரில் இருந்த உப்பின் அளவும் குறைந்தது. இதனால் நிலத்தடி நீரில் உப்பை வெளியேற்றிய முதல் மாநிலம் என்ற பெருமையும் புதுச்சேரிக்கு கிடைத்தது.

2004-ம் ஆண்டு வரை இத்திட்டம் சிறப்பாகச் செயல்பட்டது. பின்னர் இத்திட்டத்துக்கான நிதியை ஐரோப்பிய யூனியன் நிறுத்திக் கொண்டது.  இதையடுத்து மத்திய அரசு 3 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கினாலும், ரூ.7.56 கோடி நிதியை புதுச்சேரி அரசு செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இத்திட்டத்தை அரசே ஏற்று நடத்தும் என அப்போதைய முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார். ஆனால், அரசின் நிதிப்பற்றாக்குறையால் இத்திட்டத்துக்கு உரிய நிதி ஒதுக்க முடியாமல் போனது.  இதனால் இப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் கடந்த 2010-ம் ஆண்டு புதுவை முதல்வராக வைத்திலிங்கம் பொறுப்பேற்றார்.

அப்போது 2 ஆயிரம் ஏக்கர் வரை பரப்புள்ள பாகூர், ஊசுட்டேரி ஆகியவை பொதுப்பணித்துறை ஏரிகளாயின. மற்ற 82 ஏரிகளும் அந்தந்தப் பகுதி பஞ்சாயத்துகள் வசம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.

இவற்றில் 100 நாள் வேலைத் திட்டம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நிலத்தடி நீர் மீண்டும் பாதிப்பு:  இதையடுத்து, வழக்கம்போல ஏரிகளுக்கான நீர்வரத்துப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் மீண்டும் கிணற்று நீர்ப் பாசனத்துக்கு மாற வேண்டியதாயிற்று. இதன் காரணமாக நிலத்தடி நீரில் உப்பின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது.

மீண்டும் புனரமைப்புத் திட்டம்... :  இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கேற்ப ஏரிகள் புனரமைப்புத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கடந்த மார்ச் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி தலைமைச் செயலர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் உள்பட 5 அதிகாரிகள் கொண்ட குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கப்படுமா?

ஐரோப்பிய யூனியன் அளித்த பல கோடி ரூபாய் நிதியில் இத்திட்டம் அக்காலத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.

அவ்வாறு புதுச்சேரி அரசும் தற்போது தொய்வில்லாமல் நிதி அளித்தால் மட்டுமே இத்திட்டம் சிறப்பாக செயல்பட முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்புத் தலைவர் வி.சந்திரசேகர் கூறியது:  ஏரிகள், குளங்கள் பராமரிப்புக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்குகிறது.

அத்திட்டத்தில் புதுச்சேரி அரசுக்கு நிதி கிடைக்க தற்போது வாய்ப்பு இருக்கிறது.

நீருக்கு கட்டணம் நிர்ணயிக்கும் சூழல் தற்போது காணப்படுகிறது. மேலும் வறட்சியும் அதிகம் உள்ளது. அதனால் நீர் சேமிப்பில் அரசு அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பொதுப்பணித்துறை வசம் இருக்கும் நிதிகளை, வேறு திட்டங்களுக்குத் திருப்பி விடாமல் முறையாக ஏரிகள் சீரமைப்புக்கு ஒதுக்கீடு செய்தாலே போதுமானது.

முக்கியமாக, பஞ்சாயத்துகள் வசம் இருக்கும் ஏரிகளை விவசாயிகள் கைகளில் ஒப்படைத்தாலே ஏரிகளைச் சீரமைத்துவிட முடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com