முப்படை வீரர்களின் நலனுக்காக ஆளுநர் மாளிகை சார்பிலும் நிதி வசூலித்துத் தரப்படும்: துணைநிலை ஆளுநர்

ஆளுநர் மாளிகை (ராஜ் நிவாஸ்) சார்பிலும், முப்படை வீரர்களின் நலனுக்காக நிதி வசூலித்துத் தரப்படும் என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகை (ராஜ் நிவாஸ்) சார்பிலும், முப்படை வீரர்களின் நலனுக்காக நிதி வசூலித்துத் தரப்படும் என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
 முப்படை வீரர்கள் தியாகத்தையும், வீரத்தையும் போற்றும் வகையிலும், அவர்களுக்கு நிதி திரட்டும் வகையிலும் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ஆம் தேதி கொடி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அரசுத் துறைகளில் அதிகளவு கொடிநாள் நிதி வசூலித்து கொடுத்த துறைச் செயலர்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து, கேடயங்களை வழங்குவது வழக்கம்.
 அந்த வகையில் கடந்த ஆண்டு அதிக கொடிநாள் நிதி வசூலித்து கொடுத்த செயலர்கள், அதிகாரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆளுநர் கிரண் பேடி பங்கேற்று கேடயங்களை வழங்கினார்.
 நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் (பொ) கந்தவேலு, அரசுச் செயலர் சுந்தரவடிவேலு, ஆளுநரின் செயலர் தேவநீதிதாஸ், டிஜிபி சுனில்குமார் கெüதம் மற்றும் முப்படை வீரர்கள் நலத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
 கடந்த 2016-17 ஆம் ஆண்டில் கல்வித் துறை ரூ. 14.39 லட்சம், வருவாய்த் துறை ரூ. 4.24 லட்சம், பொதுப் பணித் துறை ரூ. 1.86 லட்சம், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சார்பில் ரூ. 5.54 லட்சம், மாஹே பிராந்தியம் சார்பில் ரூ. 1.35 லட்சம், ஏனாம் பிராந்தியம் சார்பில் ரூ. 52 ஆயிரம், ஜிப்மர் சார்பில் ரூ. 1.53 லட்சம் என மொத்தம் ரூ. 39.56 லட்சம் வசூலிக்கப்பட்டிருந்தது.
 துறை செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு கேடயங்களை வழங்கி ஆளுநர் கிரண் பேடி பேசியதாவது:
 கொடிநாள் நிகழ்ச்சி என்பது நமது ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் நாளாகும். ராணுவ வீரர்கள் மனித நேய அடிப்படையில் நம்மையும், நாட்டையும் மிகவும் கடினமான சூழ்நிலையில் போற்றி பாதுகாத்து வருகின்றனர்.
 கொடிநாள் நிகழ்ச்சி மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் சிறந்த அறிவுரை கிடைக்கிறது. இதன் மூலம் ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் தைரியத்தை மாணவர்கள் அறிகின்றனர். வருகிற ஆண்டுகளில் ஆளுநர் மாளிகை சார்பிலும் முப்படை வீரர்கள் நலனுக்காக நிதி வசூலித்து தரப்படும். நமது தகுதிக்கு ஏற்றவாறு கொடிநாள் வசூலை இலக்கு நிர்ணயித்து மேற்கொள்ளலாம்.
 நாம் ஒருவருக்கு உதவி புரிந்தால், நமக்கு மற்றவர்கள் உதவி புரிவர். சுயநலமில்லாத சேவையே தற்போதைய தேவை ஆகும். ஒருவருக்கு சேவை புரிவதை கடவுள் நமக்கு அளித்த சிறந்த வாய்ப்பாக நினைக்க வேண்டும். திறன் மேம்பாடு, கல்வி, ஆரோக்கியம், அரசு திட்டங்கள் தேவைப்படும் சீருடை துறைகளில் பணிபுரிபவர்களின் குழந்தைகளுக்கு உதவ வேண்டும். இதற்கான பணிகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com