பிரதமருக்கு எதிராக விரைவில் போராட்டம்

மூன்று மாதங்களாக சந்திக்க நேரம் ஒதுக்காத பிரதமருக்கு எதிராக நாடாளுமன்றம் கூடும் போது போராட்டம் நடத்தி முறையிடுவேன் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

மூன்று மாதங்களாக சந்திக்க நேரம் ஒதுக்காத பிரதமருக்கு எதிராக நாடாளுமன்றம் கூடும் போது போராட்டம் நடத்தி முறையிடுவேன் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:
தில்லியில் இந்தியா டுடே பத்திரிகை சார்பில் நடைபெற்ற விழாவில் சிறிய மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கை காப்பதில் புதுவை மாநிலத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அதேபோல, சுற்றுலா வளர்ச்சியிலும் புதுவைக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
கோயில் திருப்பணிக்கு ரூ.10 கோடி நிதி: வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் புனரமைப்பு, திருப்பணிக்காக ரூ. 4.45 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. திருக்காஞ்சி கங்காதீஸ்வரர் கோயிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரூ. 5.8 கோடி வழங்கியுள்ளது.
தமிழக ஆளுநர் கோவை சென்று ஆய்வு செய்துள்ளார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை பொருத்தவரை துறை ரீதியாக அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தவோ, ஆய்வு மேற்கொள்ளவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் தொடுத்த வழக்கில் முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் மட்டுமே அரசின் அன்றாட நிகழ்வுகளில் பங்கேற்க அதிகாரம் உள்ளது. ஆளுநர் இதில் தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அன்றாட நிகழ்வுகளில் ஆளுநர்கள் பங்கேற்கலாம் எனக் கூறி, தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் ஆளுநரிடம் சரணடைந்துள்ளனர்.
தமிழக அரசை மத்திய பாஜக அரசு பினாமியாக வைத்துக்கொண்டு ஆட்சி செய்ய நினைக்கிறது. தமிழக அமைச்சர்கள் தங்களுடைய உரிமைகளை யாரிடமும் விட்டுக் கொடுக்கக் கூடாது.
புதுவையில் சட்டத்தை மீறி செயல்படும் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம்.
புதுவையில் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தியுள்ளோம். பொதுத் துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவை ஆளுநர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அதை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்.
துணைநிலை ஆளுநர் விதிமுறைகளை மீறிய செயலில் ஈடுபடுகின்றார். இதுகுறித்து பலமுறை பிரதமரிடம் தெரிவித்துள்ளேன். கடந்த 3 மாதங்களாக பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரினேன். ஆனால், இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. நாடாளுமன்றம் கூடும் போது பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்தி முறையிடுவேன்.
சென்டாக் வழக்கில் அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. இது பழிவாங்கும் வகையில் செயல்படுவோருக்கு பாடமாகும்.
நல்ல அதிகாரிகளைக் காப்பது அரசின் கடமையாகும் என்றார் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com