பதவிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவின் தந்தை நீதிமன்றத்தில் சரண்

புதுவையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவின் தந்தைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததால், புதுச்சேரி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அவர் சரணடைந்தார்.

புதுவையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவின் தந்தைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததால், புதுச்சேரி நீதிமன்றத்தில் 
செவ்வாய்க்கிழமை அவர் சரணடைந்தார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர். காங்கிரஸ்  எம்எல்ஏவாக இருந்தவர் அசோக்ஆனந்த்.  இவரது தந்தை ஆனந்தன்.  
2007-2008-ஆம் ஆண்டு காலகட்டத்தில் புதுவை மாநில பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளராக ஆனந்தன் பணியாற்றிய போது, வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக சிபிஐக்கு புகார் சென்றது. இதன் பேரில் ஆனந்தன், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் அசோக்ஆனந்த் ஆகியோர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை புதுச்சேரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆனந்தன் மனைவி விஜயலட்சுமி மரணமடைந்துவிட்டார்.  வழக்கு விசாரணை  முடிவடைந்ததால் தலைமை நீதிபதி தனபால் கடந்த அக்.30-ஆம் தேதி  தீர்ப்பு வழங்கினார். இதில் ஆனந்தன், அசோக் ஆனந்த் எம்எல்ஏ ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்தார். பின்பு, குற்றஞ்சாட்டப்பட்ட  2 பேருக்கும் தலா ஓராண்டு  சிறைத் தண்டனையும், தலா ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.   அதைத் தொடர்ந்து அசோக் ஆனந்த் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 
இந்த நிலையில், புதுச்சேரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆனந்தன் செவ்வாய்க்கிழமை மாலை சரணடைந்தார்.  அவரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்க நீதிபதி தனபால் உத்தரவிட்டார்.அதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 
இதுதொடர்பாக நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகையில், 
புதுச்சேரி நீதிமன்றம் வழங்கிய ஓராண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அசோக்  ஆனந்த் மற்றும் ஆனந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்தனர். 
இதில், அசோக்ஆனந்த் தண்டனைக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவரது தந்தை ஆனந்தனுக்கு ஜாமீன் வழங்கவில்லை எனத் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com