புதுச்சேரி அருகே கோயிலுக்குச் சென்ற பெண் கழுத்தறுத்துக் கொலை

புதுச்சேரி அருகே கோயிலுக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி அருகே கோயிலுக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
 புதுச்சேரி அருகே வில்லியனூரை அடுத்துள்ள கரிக்கலாம்பாக்கம் மாஞ்சாலை வீதியைச் சேர்ந்தவர் அசோக்ராஜ் (32). இவரது மனைவி கிருஷ்ணவேணி (30). இவர்களது குழந்தைகள் ஜெய்கணேஷ் (3), ஜெய்ஸ்ரீ (2).
 கிருஷ்ணவேணி புதன்கிழமை கோயிலுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றாராம். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கரிக்கலாம்பாக்கம் - பாகூர் பிரதான சாலை காளி கோயில் குளம் அருகே புளியமரத்தடியில் கிருஷ்ணவேணியின் கைகள் சேலையால் கட்டப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் கரிக்கலாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
 முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா தலைமையில், புதுச்சேரி மேற்கு காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன், காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் கதிரேசன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கிருஷ்ணவேணியின்சடலத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர், சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விரல்ரேகைப் பதிவு உள்ளிட்ட ஆதாரங்களைச் சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அது சம்பவ இடத்திலிருந்து சிறிது தொலைவு ஓடி அருகே உள்ள தனியார் நிறுவனத்துக்குள் சென்றது. இதையடுத்து, அங்கும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
 கிருஷ்ணவேணியின் கழுத்துப் பகுதி மட்டுமே கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது. அவர் அணிந்திருந்த தாலிச் சங்கிலி, கம்மல், வளையல் உள்ளிட்ட தங்க நகைகளைக் காணவில்லை. அவர் நகைகளுக்காக கொலை செய்யப்பட்டாரா? வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 இந்தச் சம்பவம் குறித்து கரிக்கலாம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கிருஷ்ணவேணியின் கணவர், உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
 இதனிடையே, கிருஷ்ணவேணியின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், அரசூரில் வசிக்கும் அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், கிருஷ்ணவேணிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், வட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. பாகூர் வட்டாட்சியர் கார்த்திகேயன் சம்பவம் நடைபெற்ற பகுதியைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com