புதுவையில் தொழில் தொடங்க தயார் நிலையில் 2 ஆயிரம் ஏக்கர்: பிப்டிக் தலைவர்

புதுவையில் தொழில் தொடங்க வரும் தொழில்முனைவோருக்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலம்

புதுவையில் தொழில் தொடங்க வரும் தொழில்முனைவோருக்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலம் தயார் நிலையில் உள்ளதாக பிப்டிக் தலைவர் இரா.சிவா எம்.எல்.ஏ.  தெரிவித்தார். 
புதுச்சேரியில் ஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டின் 2ஆம் நாளான சனிக்கிழமை வணிகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள், முன் முயற்சிகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:
புதுவையில் கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத் துறை எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.  இங்கு தொழில் தொடங்குவதற்கான சூழல் நன்றாக உள்ளது. இந்தியா மற்றும் அண்டை நாடுகளை சேர்ந்தச் தொழில்முனைவோர் தொழில் தொடங்க ஏற்ற மாநிலம் புதுவை. தொழில் வளத்தை ஏற்படுத்தி அதன்மூலம் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் புதுவை அரசு கடந்த 1974-ஆம் ஆண்டு பிப்டிக் நிறுவனத்தை தொடங்கியது.
அந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை மேட்டுப்பாளையம்,  சேதராப்பட்டு,  திருபுவனை, கிருமாம்பாக்கம் ஆகிய நான்கு தொழிற்பேட்டைகள்  அமைக்கப்பட்டு பலர் தொழில் தொடங்க மனைகள் ஒதுக்கப்பட்டு, அங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.  இதுமட்டுமன்றி காலாப்பட்டில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, காரைக்காலில் தொழில் வளர்ச்சி மையம் அமைக்கப்பட்டு தொழில் முனைவோருக்கு மனைகள் ஒதுக்கப்பட்டுவருகின்றன.
இப்படி கடந்த 44 ஆண்டுகளில் பிப்டிக் நிறுவனம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. ஏற்கெனவே 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில்,  தற்போது 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்  தொழில் தொடங்க முன்வரும் தொழில் முனைவோருக்கு கொடுக்க பிப்டிக் நிறுவனம் தயாராக இருக்கிறது. புதுவை மாநிலத்தின் மொத்த வருவாயில் பிப்டிக் நிறுவனம் 20 சதவீத வருவாயைக் கொடுக்கிறது. 
பிப்டிக் நிறுவனம் தொழில் முதலீட்டாளர்களை மேலும் கவரும் வகையில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் மின்கட்டணச் சலுகை, உடனடி இடவசதி,  தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி,  வங்கியை காட்டிலும் ஒரு சதவீதம் வட்டி குறைவு,  முறையாக கடன் தவணை செலுத்தினால் மேலும் ஒரு சதவீதம் சலுகை, சுத்தமான குடிநீர் வசதி,  சிறப்பான சுற்றுச்சூழல் என எண்ணற்ற சலுகைகளுடன் புதிய தொழிற்கொள்கையை புதுவை அரசு உருவாக்கி உள்ளது.  
சேதராப்பட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் உணவுப் பூங்கா அமைக்க தேவையான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார் சிவா எம்.எல்.ஏ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com