இரவிலும் நீடித்த புதுவை முதல்வரின் போராட்டம்

புதுவை ஆளுநர் மாளிகை அருகே முதல்வர் நாராயணசாமியின் தர்னா போராட்டம் புதன்கிழமை இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புதுவை ஆளுநர் மாளிகை அருகே முதல்வர் நாராயணசாமியின் தர்னா போராட்டம் புதன்கிழமை இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
புதுவை ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸின் முன்புறப் பகுதியில் முதல்வர் 
வே. நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் புதன்கிழமை பிற்பகல் முதல் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
7 மணி நேரத்துக்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்தது. ஆளுநர் கிரண் பேடி கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
முன்புற பகுதிக்குள், போராட்டம் நடத்தும் முதல்வர், அமைச்சர்களைத் தவிர யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. ஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் யாரும் ஆளுநர் மாளிகைக்கு செல்ல முடியாத வகையில் போலீஸார் தடுப்புகளை வைத்துள்ளனர். இருப்பினும், காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் அமைப்பினர் அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஒரு சிலர் காமராஜர் சதுக்கம் அருகே மறியலில் ஈடுபட்டனர். 
கோப்புகள் பார்வை: முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை இரவு வரை தர்னாவில் ஈடுபட்டதால், துறைகள் தொடர்பான கோப்புகளுடன் அதிகாரிகளை  வரவழைத்து அங்கேயே கையெழுத்திட்டார். இதுபோல, சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமியும் கோப்புகளை வரவழைத்து கையெழுத்திட்டார். போராட்டம் நடைபெற்ற இடமான ஆளுநர் மாளிகையின் முன் பகுதிக்கு மாலையில் வந்த சட்டப்பேரவைத் தலைவர் வி. வைத்திலிங்கம், முதல்வர், அமைச்சர்களிடம் தனது ஆதரவை தெரிவித்தார்.
சமைத்து உண்ணும் போராட்டம்...: ஆளுநர் மாளிகையின் பின்புறப் பகுதியில் போலீஸார் அமைத்திருந்த பாதுகாப்பு தடுப்புகளுக்கு அருகே மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஏ. நமச்சிவாயம் தலைமையில் மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேமலதா முன்னிலையில் மகளிர் காங்கிரஸார் சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்ட
னர். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கிருஷ்ணவேணி எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ்  மகளிரணியினரும், தொண்டர்களும் பறையடித்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அப்பகுதியில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். மேலும், போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
முன்னதாக, தலைமைச் செயலர் அஸ்வனி குமார், டிஜிபி சுந்தரிநந்தா ஆகியோர் முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் குறைந்தபட்ச கோரிக்கைகளையாவது ஏற்றுக்கொண்டால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என முதல்வர் தெரிவித்ததால், முடிவு ஏற்படாமல் போராட்டம் நள்ளிரவைத் தாண்டியும் 
நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com